“மொபைல் இயர் போனில் நெட் ஆக்டிவேட் செய்யப்பட்டதால் ரயிலில் இருந்த ஹைடென்ஷன் கேபிளில் இருந்து கரண்ட் கடந்து காது வழியாக மூளையை சென்றடைந்தது அதன் பிறகு என்ன நடந்தது..? நீங்களே பாருங்கள்..! ரயில்வே பிளாட்பாரத்தில் எப்போதும் இயர் போன், ப்ளூ டூத் பயன்படுத்துவதை தவிர்க்கவும், பயணத்தின் போது நடைமேடையில் "ரயில் பாதைக்கு அருகில்" நிற்க வேண்டாம்” என்ற தகவலுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்காணொலியில், ரயில் நிலையத்தின் நடைமேடை அருகே நின்று இருவர் பேசிக்கொண்டு உள்ளனர். திடீரென ஒருவர் மீது மின்சாரம் பாய்வது பதிவாகியுள்ளது. இதற்கு காரணம் அந்த நபர் ப்ளூ டூத் இயர் போன் பயன்படுத்தியது தான் என்று பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றே வெளியிட்டுள்ளது.
அதன்படி, “மேற்கு வங்கத்தின் காரக்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண். 4ல் டிசம்பர் 7ஆம் தேதி அன்று மின் கம்பி அறுந்து விழுந்ததில் அருகே நின்று கொண்டிருந்த ரயில் டிக்கெட் பரிசோதகரான சுஜன் சிங் சர்தார் மீது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். காரக்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதே செய்தியை Times Now டிசம்பர் 8ஆம் தேதியும், Hindustan Times டிசம்பர் 9ஆம் தேதியும் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து, எந்த செய்தியிலும் அந்த நபர் ப்ளூடூத் இயர் போன் பயன்படுத்தியதால் தான் மின்சாரம் தாக்கியதாக இல்லை, மாறாக மின் கம்பி அறுந்து விழுந்ததாலேயே மின்சாரம் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இதே தகவல் 2022ஆம் ஆண்டு வைரலான போது நியூஸ் மீட்டர் ஆங்கிலப் பிரிவு இதனை ஃபேக்ட்செக் செய்திருந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ப்ளூடூத் இயர் போன் பயன்படுத்தியதால் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த நபர் மீது மின்சாரம் பாய்ந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் மின் கம்பி அறுந்து விழுந்ததாலேயே அவர் மீது மின்சாரம் தாக்கியது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.