"என்ன நடக்கிறது நாட்டில்?. இதுபோன்ற அரசியல் வியாபாரிகள் / அதிகாரிகள் பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் நடவடிக்கையை பாருங்கள்! இவர் தான் கூட்டுறவு வருவாய் துறைக்கு வரவேண்டாம் என முதல்வரிடம் மனு அளித்தவர்!. இந்த ஈனசெயலுக்கு #விடியாத திமுக ஆட்சியாளர்கள் என்ன செய்யறாங்க பாப்போம்?. அந்த பெண் பொறுமையிழந்து செருப்பால் அடிக்க என்ன காரணம்????....#MJB." என்று கூறி 5 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், ஒரு நபர் பெண்ணை மார்பில் காலால் எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நிலத் தகராறு தொடர்பாக ஒரு பெண்ணின் மார்பில் காலால் உதைத்ததாக ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்பள்ளி மண்டல் பரிஷத்தின் (தொகுதி) தலைவர் இம்மாடி கோபி. இவர் நிலத் தகராறில் கௌராரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவ்வா என்ற பெண்ணை காலால் உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து பெண்ணை தாக்கியதாக கோபி மீது இந்தல்வாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தி டெக்கான் கிரானிக்கள், மும்பை மிரர் உள்பட பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒருவர் பெண்ணை மார்பில் உதைப்பது போன்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.