“அமெரிக்காவில் ஒரு மதவெறியன் ஒரு பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கிறான். அவன் நிலைமை என்ன?” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நபர் ஒருவர் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இக்காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, CureBore என்ற எக்ஸ் பக்கம், இச்சம்பவம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி போலந்து நாட்டின் லுப்லினிக் என்ற இடத்தில் நடைபெற்றது என்று பதிவிட்டிருந்தது. தொடர்ந்து, தேடுகையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி The Sun ஊடகத்தில் வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, “இச்சம்பவத்தில் உடைக்கப்பட்டது கடை என்பதும் தெரியவருகிறது. இது குறித்து அக்கடையின் உரிமையாளர் கூறுகையில், இந்த நபர் எனது கடையின் ஜன்னல் கண்ணாடிகளை இரண்டு முறை உடைத்துள்ளார். இரண்டாவது முறை உடைத்துக்கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்து சென்றவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே தப்பிப்பதற்காக ஓடிய இந்த நபர் காரில் அடிபட்டு கீழே விழுந்தார்.
இதில், சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தியை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி Metro ஊடகமும் விரிவாக வெளியிட்டுள்ளது. Metro செய்தியின்படி, "இச்சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் மற்றும் அவர் மீது ஏதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்பது போன்ற விவரங்கள் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அமெரிக்காவில் ஒரு மதவெறியன் மசூதியின் கண்ணாடியை உடைப்பதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை. அது உண்மையில் போலந்து நாட்டின் லுப்லினிக் என்ற இடத்தில் நடைபெற்றது என்றும் அதில் உடைக்கப்படும் ஜன்னல் கண்ணாடி கடையினுடையது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.