சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொன்முடியை அடுத்து அமைச்சர் எ.வ. வேலு சர்ச்சையாக பேசியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
அதில், "சோலி கே பீச்சே பாடலை சிவன் அல்லது வைஷ்ணவ கோவில்களில் பாட முடியுமா.?? கேடுகெட்ட திமுக அமைச்சர்கள்.!” என்ற கேப்ஷனுடன் அக்காணொலி பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசும் அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, “சிவன் கோயிலிலும் வைஷ்ணவ கோயிலிலும் “சோலி கே பீச்சே” என்று பாட முடியுமா” என்கிறார்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் அமைச்சர் எ.வ.வேலு ஹிந்தி திணிப்பு குறித்து பேசிய காணொலி எடிட் செய்யப்பட்டு தவறாக பகிரப்படுவது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி “நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்.. அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்பு | Kanchipuram” என்ற தலைப்புடன் புதிய தலைமுறை ஊடகம் அமைச்சர் பேசும் நேரலைக் காணொலியை வெளியிட்டிருந்தது.
அதன் 28:25 பகுதியில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கையினால் தான் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்று கூறிவிட்டு மும்மொழிக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஹிந்தி திணிப்பு குறித்து பேசுகிறார்.
அப்போது, 34:30 பகுதியில் ஹிந்தி திணிப்பு குறித்து விளக்கம் அவர், “இன்னும் ஒரு படி உங்களுக்கு தெளிவாக கூற விரும்புகிறேன். கோயிலுக்கு செல்கிறோம். அங்கு ஆழ்வாராக இருந்தால் 4000 திவ்ய பிரபந்தத்தை தமிழில் தான் பாடுகிறார்கள். சைவக் கோயில் எங்கிருந்தாலும் அங்கு தேவாரமும் திருவாசகமும் தமிழில் தான் பாடப்படும்” என்கிறார்.
தொடர்ந்து, “சிவன் கோவிலிலும் வைஷ்ணவ கோவிலிலும் “சோலி கே பீச்சே (ஹிந்தி பாடல்)” என்று பாட முடியுமா. பிறகு எதற்கு எங்களை ஹிந்தி மொழி படிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்கிறார். இதன் மூலம் அமைச்சர் எ.வ.வேலு ஹிந்தி திணிப்பு குறித்து பேசிய காணொலி எடிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவருகிறது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் “சோலி கே பீச்சே” என்ற ஹிந்தி பாடலை சிவன் அல்லது வைஷ்ணவ கோயில்களில் பாட முடியுமா என்று ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசிய காணொலியை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.