சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் 100% கோதுமையால் தயாரிக்கப்பட்ட பீர் விற்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கோதுமை பீர், ராகி ரம், வரகு விஸ்கி, கம்பு பிராந்தி எல்லாம் வரலாம் வாய்ப்பிருக்கு. இந்தியாவை காப்பாற்ற தளபதியின் தொலைநோக்கு திட்டம்” என்ற கேப்ஷனுடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஒருவருக்கு மதுவை வாயில் ஊற்றி விடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலைமலர் வெளியிட்டிருந்த செய்தியின் படி, புதிதாக கோதுமையால் தயாரிக்கப்பட்ட பீர் மட்டுமே டாஸ்மாக்கில் அறிமுகமாக உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து “ஊட்டி விடும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்” என்ற வார்த்தையுடன் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி “மூதாட்டியின் வாயில் குச்சி ஐஸ் வைத்த செஞ்சி மஸ்தான்.. என்ன இது விளையாட்டு.. சின்னபுள்ளதனமா இருக்கு ?” என்ற தலைப்பில் பாலிமர் நியூஸ் தனது யூடியூப் சேனலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அக்கானொலியில் உள்ள தம்நெயில் (Thumbnail) புகைப்படத்தில் அமைச்சர் ஒரு நபருக்கு குச்சி ஐஸ் கொடுப்பது போன்று உள்ளது. அப்புகைப்படத்தில் இருக்கும் குச்சி ஐஸை நீக்கிவிட்டு பீர் பாட்டிலை வைத்து தவறாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்ததில் அது எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அமைச்சர் மஸ்தான் ஒருவருக்கு மதுவை வாயில் ஊற்றி விடுவது போன்று வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.