Fact Check: பொங்கல் பரிசுத் தொகையை தவறாக கணக்கிட்டாரா மு.க. ஸ்டாலின்? வைரலாகும் காணொலியின் உண்மை பின்னணி
ரூபாய் 5000த்திலிருந்து 2500ஐ கழித்தால் 1500 வரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 6 Jan 2025 9:28 PM ISTClaim: 5000 ரூபாயில் இருந்து 2500ஐ கழித்தால் 1500 வரும் என்று கூறிய மு.க. ஸ்டாலின்
Fact: இக்காணொலி எடிட் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அவர் சரியாகவே கணக்கிட்டு கூறினார்
இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ரொக்கம் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஸ்டாலின், “பொங்களுக்காக 2500 ரூபாய் கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். நான் அதை வரவேற்கிறேன், வேண்டாம் என்று கூறவில்லை. இந்த 5000த்திற்கு எவ்வளவு மிச்சம் உள்ளது 1500ஆ… ஆக அந்த 1500ஐயும் சேர்த்து கொடுங்க என்று தான் மீண்டும் மீண்டும் இந்த அரசாங்கத்தை பார்த்து கேட்கிறேன்” என்கிறார். இதில், 5000த்திலிருந்த 2500ஐ கழித்தால் 1500 வரும் என்று மு.க. ஸ்டாலின் தவறாக கணக்கிட்டு கூறியதாக இதனை பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் மு.க. ஸ்டாலின் சரியாகவே கணக்கிட்டுள்ளார் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்து தமிழ் ஊடகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்றும் ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பாக பேசியது என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து, இது தொடர்பாக யூடியூபில் சர்ச் செய்து பார்த்தபோது STV News 24x7 என்ற யூடியூப் சேனலில் ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் மு.க. ஸ்டாலின் பேசக்கூடிய நேரலை காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதன் 1:40:10 முதல் 1:41:32 பகுதியில் பேசும் அவர், “கரோனா ஊரடங்கின் போது எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையில் நான் ஒரு அறிக்கை விடுத்திருந்தேன். அதில், வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கக் கூடிய மக்களுக்கு உடனடியாக 5000 ரூபாய் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். இதுவரை வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால், 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனை வைத்து என்ன செய்ய முடியும், ஒரு நாள் செலவிற்கு கூட பத்தாது. 5000 ரூபாயே பத்தாது அதுவேறு. இருந்தாலும் பத்து நாட்களாவது தாக்குப்பிடிப்பார்கள் என்பதற்காக 5000 ரூபாய் வழங்கக்கூறினேன். ஆனால், அதனை திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
தற்போது, நான்கு மாதத்தில் தேர்தல் வரப்போவதால் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக திடீரென்று பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்துள்ளனர். நான் இதையும் வரவேற்றுள்ளேன், வேண்டாம் என்று கூறவில்லை. முதலில் நான் சொன்னது 5000. ஆனால், 1000 ரூபாய் கொடுத்தீர்கள். இப்போ, 2500. 2500ஐயும் 1000த்தையும் கூட்டினால் 3500. இந்த 5000த்திற்கு இன்னும் 1500 மிச்சம் உள்ளது. ஆக அந்த 1500ஐயும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று தான் இந்த அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்” என்கிறார்.
இதில் சரியாக 1:41:14 முதல் 1:41:22 பகுதியில், "1000 ரூபாய் கொடுத்தீர்கள். இப்போ, 2500. 2500ஐயும் 1000த்தையும் கூட்டினால் 3500" என்று மு.க. ஸ்டாலின் கூறுகிறார். இப்பகுதியை நீக்கிவிட்டு நேரடியாக 1500 வரும் பகுதியை எடிட் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் 5000லிருந்து 2500ஐ கழித்தால் 1500 வரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.