Fact Check: விபூதி பட்டை அடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்? உண்மை என்ன

லண்டனில் உள்ள விபூதி பட்டை அடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

By Ahamed Ali
Published on : 8 Sept 2025 4:29 PM IST

Fact Check: விபூதி பட்டை அடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்? உண்மை என்ன
Claim:லண்டனில் விபூதி பட்டையுடன் இருந்த திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தியதாக புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது

திருவள்ளுவரை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு காவி உடை அணிந்தும் வலதுசாரியினர் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில், அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லண்டனில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தியதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் விபூதி பட்டை அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் தினமணி ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமணி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி

இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வைரலாகும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், லண்டன் SOAS பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் நமது திராவிட மாடல் ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிர்ந்து, மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன்.

பின்னர், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன். இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபினையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெறும் PACT கண்காட்சியைப் பார்வையிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எதிலுமே திருவள்ளுவரின் நெற்றியில் விபூதி பட்டை இடம்பெறவில்லை என்று தெரிந்து வந்தது.

மேலும், SOAS பல்கலைக்கழகத்தில் உள்ள இதே திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை 2017ஆம் ஆண்டு Luke McKernan என்பவர் தனது Flickr பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும், நெற்றியில் விபூதி பட்டை இடம்பெறவில்லை என்று தெரியவந்தது.


இரு புகைப்படங்களின் ஒப்பீடு

Conclusion:

முடிவாக, லண்டனில் உள்ள விபூதி பட்டை அடித்த திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் திருவள்ளுவரின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

Claim Review:விபூதி பட்டை அடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது
Next Story