பாகிஸ்தானில் உணவுக்காக மசூதியை இடித்து அதில் உள்ள கம்பி மற்றும் செங்கல்களை எடுத்துச் செல்கின்றனர். இந்த வாரத்தில் இதோடு மூன்றாவது மசூதி இடிக்கப்படுகின்றது என்று மசூதி ஒன்றினை இடிக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, டைம்ஸ் ஆப் இந்தியா கடந்த பிப்ரவரி 3ம் தேதி வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "கராச்சியில் உள்ள ஒரு அஹ்மதி(பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்) மசூதி பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் குழுவைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இம்மசூதியின் மினாராக்களை உடைத்துவிட்டு மர்ம நபர்கள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு மாதத்தில் அஹ்மதி மசூதியின் மினாராக்கள் இடிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் இதனை தடுக்க தவறிவிட்டனர் என்றும் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து தேடுகையில், இந்த மசூதி இடிப்பை அடிப்படையாகக்கொண்டு பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களாக இருக்கக்கூடிய அஹமதியாக்களின் மசூதிகள் ஏன் இடிக்கப்படுகின்றன என்று விளக்கக் கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
இறுதியாக, பாகிஸ்தானில் உணவுக்காக மசூதியை இடித்து அதில் உள்ள கம்பி மற்றும் செங்கல்களை எடுத்துச் செல்கின்றனர் என்று பரவும் செய்தி பொய் என்றும் உண்மையில், அஹ்மதியாக்களின் பள்ளி இடிக்கப்பட்ட காணொலி தான் அது என்பதையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.