“நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களை காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய்” என்று நாய் ஒன்று நிலச்சரிவில் சிக்கியது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்த நாய் சிக்கியதாக கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இது 2021ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது. இக்காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் காணொலியில் உள்ள நாயின் புகைப்படத்துடன் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி Manorama செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “குட்டிகளின் உயிரைக் காப்பாற்ற தாய் நாய் சத்தமிட்டு அழுதுள்ளது. தொடர்ந்து அதனை மீட்க முயன்றனர். ஆனால், நிலத்தடியில் இருந்து இரண்டு நாய்க்குட்டிகளை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. பாலக்காடு கபூர் கஞ்சிரத்தாணி பகுதியைச் சேர்ந்த கந்தம்குளங்கரை ஹைதரலி என்பவரது வீட்டின் அருகில் ஏற்பட்ட மண்சரிவின் போது இச்சம்பவம் நடைபெற்றது. மீட்கப்பட்ட தாய் நாய் மற்றும் இரண்டு குட்டிகள் உள்ளூர்வாசிகளின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில் இதே செய்தியை The News Minute வெளியிட்டிருந்தது. அதில், “கேரள மாநிலம் பாலக்காடு-மலப்புரம் மாவட்டங்களை ஒட்டியுள்ள கிராமத்தில் கடை நடத்தி வரும் சபிதா, அஷ்ரப் தம்பதியினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நாய் அழும் சத்தத்தை கேட்டுள்ளனர். அவர்கள் தேடியபோது எங்கிருந்து அந்த சத்தம் வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
அக்டோபர் 12 ஆம் தேதி மீண்டும் தேடியதில். இறுதியாக, ஒரு மண் மேட்டின் அடியில் நாயின் அழுகைச் சத்தம் வந்ததை கண்டுபிடித்தனர். நாய்களை சேற்றில் இருந்து மீட்க விலங்குகள் மீட்புக் குழுவினரின் உதவியை குடும்பத்தினர் நாடினர். தொடர்ந்து, இரண்டு குட்டியும் தாய் நாயும் காப்பாற்றப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை, New Indian Express ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களை காப்பாற்ற மனிதர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள சம்பவம் 2021ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.