"இது வேற யாரும் இல்லைங்க ராசாதான்" என்ற கேப்ஷனுடன் ஒரு நபர் சத்திய சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் நபர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா என்று கூறி இப்புகைப்படத்தை வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர். மேலும், அப்புகைப்படத்தில், "சணதனம் HIV ஆம்.... சொன்னது யாரு. இவரே தான் தில்லுமுல்லு திராவிடர்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அதில் உள்ள நபர் ஆ. ராசாவின் தோற்றத்தை ஒத்து இருப்பதால் அவரை ஆ. ராசா என்று கூறி பரப்பி வருவதை நம்மால் அறிய முடிகிறது. மேலும், புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, vidyullekha என்ற இணையதளத்தில் 2020ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
ஆ. ராசா மற்றும் வைரலாகும் புகைப்படம்
அதன்படி, சத்திய சாய்பாபாவின் பள்ளியில் பயின்று வனிக ஆலோசகராக பணியாற்றி ஹைதராபாத்தில் வசித்து வரும் ஆதித்யா நிட்டாலா என்பவர் சாய்பாபாவுடனான ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் சாய்பாபாவின் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்துள்ளார். அதேபோன்று சத்திய சாய்பாபாவின் பள்ளியில் படித்தது குறித்து தனது லிங்க்ட்இன் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இவற்றின் மூலம் இவர் சாய்பாபாவின் பக்தர் என்று கூற முடிகிறது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக சத்திய சாய்பாபாவிடம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆசீர்வாதம் பெற்றதாக வைரலாகும் புகைப்படத்தில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதித்யா நிட்டாலா என்பவரது புகைப்படம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.