“மக்களவையில் மரண பங்கமாக ராகுல் காந்தி கலாய்க்கப்பட்ட தருணம்! இந்த அவமானம் உனக்கு தேவையா பப்பு?” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அமீர்பூர் எம்பி அனுராக் தாகூர், “அரசியலமைப்பில் எத்தனை பாகங்கள் இருக்கின்றன என்று சொல்லுங்கள், எத்தனை பக்கங்கள் இருக்கின்றன? தினமும் அதனை தூக்கி கொண்டு வருகிறீர்கள். ஒரு முறையாவது திறந்து படியுங்கள்! படிப்பதே இல்லை. கையில் எடுத்து மட்டும் காட்டுகிறார்கள்! தினமும் அரசியலமைப்பு அரசியலமைப்பு என கூறுகிறார்கள் ஆனால், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஐயா உங்களுக்கு ஏன் வலிக்கிறது. அவசரநிலையை கொண்டு வந்தது அவர்கள் தானே” என்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் முகத்திற்கு முன்பாக பேசுகிறார். அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்க முடியாமல் திணறுவது போன்று காணொலி பதிவாகியுள்ளது.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்தோம். அதில், ராகுல் காந்தி பேசுகையில், சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்துள்ளார். ஆனால், அனுராக் தாக்கூர் பேசுகையில் சபாநாயகராக இருக்கையில் திலிப் சைகியா அமர்ந்திருந்தார். எனவே இவர்கள் இருவர் பேசியதும் வெவ்வேறு நேரத்தில் நிகழ்ந்தவை என்பதை அறியமுடிகிறது.
தொடர்ந்து, அனுராக் தாகூர் இவ்வாறாக பேசியது குறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜுலை 1ஆம் தேதி Sansad TVயின் யூடியூப் சேனலில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அனுராக் தாகூரின் காணொலியின் முழுநீள பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அரசியலமைப்பு பற்றி அவர் பேசிய பகுதி 56:44ல் இடம் பெற்றுள்ளது.
அதில், அனுராக் தாக்கூர் பேசும் போது ராகுல் காந்தி பாராளுமன்ற அவையில் இருப்பதாக தெரியவில்லை. மேலும், காணொலி தொடர்ச்சியாகவே உள்ளது. இதன் மூலம் இது எடிட் செய்யப்பட்டது என்று கூறமுடிகிறது. மேலும், எதிர்க்கட்சியினர் இருக்கை காண்பிக்கப்படுகிறது. அப்போது, ராகுல் காந்தி அவையில் இல்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மக்களவையில் எம்பி அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் ராகுல் காந்தி முழித்ததாகப் பரவும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.