“பாஜகவை கிழித்து தொங்கவிட்ட மக்களவை உறுப்பினர்” என்று மராட்டிய மாநில காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கார்ஹி பாராளுமன்றத்தில் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் எம்பி, “திரைப்படங்களுக்கான வரியை இலவசமாக செய்து கொடுக்கிறீர்கள், இறந்த ஒருவரின் உடலுக்கு பயன்படுத்தும் கவசத்திற்கு ஜிஎஸ்டி போடுறீங்க, இது பொய்யான அரசு. இந்த அரசாங்கம் என்னென்ன கொள்கைகள் வைத்திருக்கிறார்களோ அவை அனைத்தும் பொய்யான கொள்கை. நான் இப்போ இங்க இவர்களோட பத்து வருட கொள்கையை பத்தி சொல்ல போறேன்….” என்று ஒன்றிய அரசின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். மேலும், அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மௌனம் காப்பது போன்று காணொலி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாராளுமன்றத்தில் பேசிய “எம்பி இம்ரான் பிரதாப்கார்ஹி” என்ற தலைப்பில் Oneindia Hindi யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதன் 5:39 பகுதியில் வைரலாகும் காணொலியில் பேசக்கூடிய பேச்சு துவங்குகிறது.
தொடர்ந்து அக்கானொலியின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய சில முக்கியமான பேச்சுக்களை எடிட் செய்து, அவரது பேச்சிற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மௌனம் காப்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும், அந்த முழுநீளக் காணொலியின் எந்தப் பகுதியிலும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இருப்பது காட்சி படுத்தப்படவில்லை.
இதே காணொலி Sansad TV யூடியூப் சேனலில் பிப்ரவரி 7ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அதன் தலைப்பின் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது எம்பி இம்ரான் பிரதாப்கார்ஹி பேசியது என்பது தெரிய வருகிறது. அக்கணொலியிலும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது.
தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்றனரா என்று மாநிலங்களவையின் வருகைப் பதிவேட்டில் தேடியதில், அன்றைய தேதியில் அவர்கள் வரவில்லை என்பதும் உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக எம்பி இம்ரான் பிரதாப்கார்ஹி, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவின் முகத்திற்கு நேராக ஒன்றிய அரசை விமர்சித்ததாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.