“இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு..” என்று திருமாவளவன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக வெளிச்சம் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்செய்தி பழையது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய, திருமாவளவன் எம்.பியின் எக்ஸ் பக்கத்தில் ஆய்வுசெய்ததில், அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படுவது குறித்தும், இதுகுறித்து அவர் அரசை விமர்சித்தது தொடர்பாகவும் எந்தவொரு பதிவையும் அவர் பதிவிடவில்லை என்பதை அறியமுடிந்தது.
தொடர்ந்து, வெளிச்சம் தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் தகவல் தொடர்பாக ஆய்வு செய்ததில், வைரலாகும் நியூஸ் கார்டு எதுவும் சமீபத்தில் வெளியிடவில்லை என்பதை அறியமுடிந்தது. அதேசமயம், 2020ஆம் ஆண்டு ஜூலை 06ஆம் தேதி, "அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு-தொல்.திருமாவளவன்" என்று குறிப்பிடப்பட்டு வெளிச்சம் தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் 2020ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறியமுடிகிறது. 2020ல் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பலரும் இது அரசை விமர்சித்து தற்போது வெளியிடப்பட்ட புகைப்படம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஜுலை 12ஆம் தேதி வைரலாகும் தகவல் தவறானது என்று வெளிச்சம் தொலைக்காட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவன் எம்.பி அரசை விமர்சித்ததாகப் பரவும் புகைப்படம் 2020ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட பழை புகைப்படம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.