“பிரதமர் மோடியை மூஞ்சிக்கு நேராவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் செய்த இமாச்சல் காங்கிரஸ் MP” என்ற கேப்ஷனுடன் இமாச்சல் பிரதேஷ் காங்கிரஸ் மாநிலங்களவை முன்னாள் எம்பி விப்லோவ் தாக்கூர் பாராளுமன்றத்தில் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இன்று நீங்கள் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள். விமானத்தில் பயணிக்கிறீர்கள். இவை எல்லாம் யார் கொடுத்தது? இந்த பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்... இவை எல்லாம் யார் கட்டினார்கள்? ஐஐடி, ஐஐஎம் உருவாக்கியது யார்? கடந்த ஆறு ஆண்டுகளாக நீங்கள் செய்தது என்ன? இந்தியாவை உடைக்க, பிரிக்க முயன்றது அல்லாமல் வேறு என்ன நீங்கள் செய்தீர்கள்?
துரோகி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். யார் துரோகி என்று அழைக்கப்பட்டார்? இடதுசாரிகள் இந்திய சுதந்திரத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்த போது, அந்த கட்சி நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. ஆனால், அவர்களைத் துரோகி என்று நேரு அழைக்கவில்லை, அவர்களை துரோகி என்று இந்தியா கூறவில்லை. நேரு குறித்து இந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசி இருக்கிறார் வாஜ்பேயி. ஆனால், அவர் துரோகி என்று அழைக்கப்படவில்லை. ஆனால், இன்று இந்திய பிரதமர் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் குறித்து அவர்கள் கொள்கைகள் குறித்து யார் எதிர்த்துப் பேசினாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்” என்பது போன்ற பல்வேறு கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் முகத்திற்கு நேராக எம்பி விப்லோவ் தாக்கூர் கேட்பது போன்று காணொலி உள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி Sansad TVயின் யூடியூப் சேனலில் “ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது உரையாற்றிய விப்லோவ் தாக்கூர்” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், வைரலாகும் காணொலியில் உள்ள அதே பேச்சு இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.
மாநிலங்களவையில் உரையிற்றிய எம்பி விப்லோவ் தாக்கூரின் 9 நிமிடங்கள் 33 வினாடிகள் ஓடக்கூடிய முழுமையான காணொலியில் எந்தப் பகுதியிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் காட்சிப்படுத்தப்படவில்லை. இதன்மூலம் அவையின் போது இருவரும் இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியில் நடைபெற்ற அவையின் வருகை பதிவேட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்த போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்ற அவைக்கு செல்லவில்லை என்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேருக்கு நேராக பார்த்து காங்கிரஸ் மாநிலங்களவை முன்னாள் எம்பி விப்லவ் தாக்கூர் பேசினார் என்பது போன்று வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் எம்பி விப்லவ் தாக்கூர் பேசியது உண்மை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.