“தல தோனியே சொல்லிட்டாரு… உங்களுக்கு புரியுதுல” என்ற கேப்ஷனுடன் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடையில் ஒரு கையை விரித்துக் காட்டி திமுகவின் உதயசூரியன் சின்னத்தையும் மற்றொரு கையில் ஒரு விரலைக்காட்டி வாக்களிக்குமாறு கூறுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் தோனி திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, News 18 Tamilnadu 2020ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “ஐபிஎல் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டரில்(தற்போது எக்ஸ்) ஆறு மில்லியன் பின்தொடர்பவர்களை நிறைவு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அன்றைய தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில்(Archive) வைரலாகும் தோனியின் புகைப்படத்துடன், “டுவிட்டர் குடும்பம் 6 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டி வலிமையாக உள்ளது. தல தரிசனத்துடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதே பதிவை காணொலி காட்சியாகவும்(Archive) வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மகேந்திர சிங் தோனி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து புகைப்படம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் உண்மையில்லை என்றும் உண்மையில் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் ஆறு மில்லியன் பின்தொடர்பவர்களை நிறைவு செய்த போது தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.