"ஹரித்வார். முதியோர் முஸ்லீம் தம்பதியின் காரை உடைத்து முதியவரை அடித்த கன்வாரியாக்கள். கன்வாரியாக்கள் குர் மண்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, கார் பின்வாங்கும்போது, சாலையில் கன்வாரை லேசாகத் தொட்டது" என்ற தகவலுடன் 1 நிமிடமும் 4 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதுகுறித்து கடந்த ஜூலை 11ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தின் காணொலியில், கன்வாரியாக்கள் (சிவ பக்தர்கள்) முதலில் ஓட்டுநரையும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர், பின்னர் காரை அடித்து சேதப்படுத்துவதற்கு முன்பு கவிழ்த்தனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என்று ஹரித்வார் காவல்துறை மறுத்துள்ளது. வாகனத்தின் ஓட்டுநர் இஸ்லாமியர் அல்ல, ஒரு இந்து என்றும், காரில் அவருடன் பர்தா அணிந்த வந்த பெண் ஓட்டுநருக்கு தெரிந்த நபர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக, "ஹரித்வாரில் கன்வாரியாக்களால் தாக்கப்பட்ட நபர், தான் ஆர்எஸ்எஸ்-பாஜக உறுப்பினர் என்றும், கருப்புத் தொப்பியால் முஸ்லிம் என்று தவறாகக் கருதப்பட்டதாகவும் கூறுகிறார்" என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம். அதன்படி, "கார் ஓட்டுநர் பிரதாப் சிங் என்பதும் அவர் ஆர்எஸ்எஸ், பாஜகவின் உறுப்பினர் என்பதும் தெரியவருகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி
அப்பகுதி பாஜக சிறுபான்மையினர் அணியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவரின் மகனை மதரஸாவில் விட்டுவிட்டு, வரும் வழியில் மதிய உணவுக்காக வாகனத்தை நிறுத்திய போது கன்வாரில் (யாத்ரீகர்கள் புனித நீரை கொண்டு செல்ல பயன்படும் பாத்திரம்) கார் இடித்தது. கார் ஓட்டுநர் கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தாலும் அவர் அருகில் புர்கா அணிந்த பெண் இருந்ததாலும் இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் என்று தவறாக நினைத்து கன்வாரியாக்கள் அவர்களை தாக்கி உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தி சியாசத் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன.
Conclusion:
இறுதியாக, ஹரித்வாரில் வயதான இஸ்லாமிய தம்பதியினர் மற்றும் அவர்களது காரை கன்வாரியாக்கள் தாக்குவதாக பகிரப்படும் காணொலியில் இருக்கும் ஆண் இஸ்லாமியர் இல்லை என்றும் அவர் ஒரு இந்து மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் உறுப்பினர். மேலும், அப்பெண்ணும் பாஜக சிறுபான்மையினர் அணியைச் சேர்ந்தவர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.