“எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்...இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்.” என்று ஒரு நபர் காவலரை சரமாரியாக தாக்கும் காணொலியை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். சிலர் இதில் இருப்பவர் தமிழ்நாடு அல்லது தெலுங்கானாவைச் சேர்ந்த எம்எல்ஏவாக இருக்கலாம் என்றும் கூறி பரப்பி வருகின்றனர். சிலர் எம்எல்ஏ இஸ்லாமியர் என்பதால் இவ்வாறாக நடந்து கொள்கிறார் என்று மத அடிப்படையில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி The Statesman செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, ‘உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கன்கர் கெரா என்ற பகுதியில் இயங்கி வரும் பாஜக கவுன்சிலருக்கு சொந்தமான பிளாக் பெப்பர் என்ற உணவகத்தில் நடைபெற்ற சம்பவம் இது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “காவல்துறை துணை ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் பெண் ஒருவரை அந்த உணவகத்தின் உரிமையாளரான பாஜக கவுன்சிலர் மனிஷ் பன்வார் மற்றும் உணவக பணியாட்கள் இணைத்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்பெண் மற்றும் துணை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் கன்கர் கெரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, “இச்சம்பவத்தில் தொடர்புடைய பாஜக கவுன்சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்றும் துணை காவல் ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் அவருடன் சம்பவத்தன்று இருந்த பெண் வழக்கறிஞர் தீப்தி சவுத்ரி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கவுன்சிலர் மனிஷ் பன்வார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக எம்எல்ஏ மன்சூர் முகமது காவலர் ஒருவரை தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அதில் இருப்பவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக கவுன்சிலரான மனிஷ் பன்வார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.