இந்தி மொழியில் உருவாகி பெரும் சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில் இஸ்லாமியர்களே இப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வலதுசாரியினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், "படத்துக்கு, முஸ்லிம்ஸ் வித் ஹிஜாப் நாட் அலோவ்ட்னு(Muslims with hijab not allowed) போட்றுங்க. அவங்க(படத்தில் நடிப்பவர்கள்) ஒன்னும் அம்மணமாக இல்லையே, என்ன பிட்டு துணி போட்டா நடிக்கிறாங்க. நாங்க பார்க்கக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா என்ன? நான் வந்து படம் பார்ப்பேன் அது என்னுடைய ரைட்ஸ்" என்று ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பார்த்துவிட்டு அப்படத்திற்கு ஆதரவாக பேட்டி அளித்ததாக சமூக வலைதளங்களில் 30 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி Voice of Madras என்று யூடியூப் சேனல் வைரலாகும் அதே காணொலியை ஷார்ட்ஸாக பதிவிட்டு இருந்தது. மேலும், அதன் கமெண்ட் பகுதியில் "சண்டையில் முடிந்த Movie Review Oh My Ghost Review | OMG Movie Review | OMG Movie Public Review" என்ற தலைப்புடன் 3 நிமிடம் 16 விநாடிகள் ஓடக்கூடிய முழு நீள காணொலியின் லிங்க் கிடைத்தது.
தொடர்ந்து, அதனை ஆய்வு செய்ததில், சன்னி லியோன் நடித்த 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்திற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் காணொலி என்பது தெரிய வந்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வெளியான அக்காணொலியில், 2:10 முதல் 2:38 வரையிலான பகுதியில் வைரலாகும் அப்பெண், "படம் பார்ப்பது என்னுடைய உரிமை, அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நான் அப்படி தான் பார்ப்பேன்" என்று பேசியுள்ளார்.
வைரலான காணொலியின் முழு நீள காணொலி
Conclusion:
நமது தேடலின் முடிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய பெண் பேசியதாக பகிரப்படும் காணொலி சன்னி லியோன் நடித்த 'ஓ மை கோஸ்ட்' படத்திற்கானது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.