“மேலே உள்ள முஸ்லீம் அவன் பேசியதை அவரவர் செல்லில் உள்ள அனைத்து குரூப்களிலும் பகிறுங்கள் அவன் கைது ஆகும் வரை” என்ற கேப்ஷனுடன் இளைஞர் ஒருவர் இந்துக்கடவுள் ராமர் குறித்து பேசும் காணொலியை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, yenave pesuvom என்ற யூடியூப் சேனல் “விடுதலை சிகப்பி” என்ற தலைப்பில் வைரல் காணொலியில் உள்ள நபரின் புகைப்படத்துடன் கடந்த மே 11ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பேசும் பெண் ஒருவர், “இந்துவாகிய நீயே ஏன் சக இந்துவுடைய மனதை புன்படுத்துகிறாய்” என்று கேள்வி எழுப்புகிறார். இதன் மூலம் வைரல் காணொலியில் இருப்பவர் இந்து என்பதை அறிய முடிகிறது.
தொடர்ந்து, "விடுதலை சிகப்பி" என்ற பெயரை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, “விடுதலை சிகப்பி: 'மலக்குழி மரணம்' கவிதையின் நோக்கம் என்ன? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்ற தலைப்பில் கடந்த மே 10ஆம் தேதி பிபிசி தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்னும் விக்னேஸ்வரன் இந்த தலைப்பில் எழுதிய கவிதை இன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது” எனக் கூறி ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னை இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் என்றே குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, வைரலாகும் காணொலிக்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் செய்தியையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விடுதலை சிகப்பியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்துக்கடவுளை இழிவாக பேசிய இஸ்லாமியர் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது உண்மையில் ஒரு இந்து என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.