ராணுவ வீரர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸை மறித்த இஸ்லாமியர்கள் என பரவும் வங்கதேச காணொலி!
காயமடைந்த ராணுவ வீரர்களை கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் இஸ்லாமியர்கள் எனக் கூறி காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 14 July 2023 1:52 AM ISTராணுவ வீரர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்ததாக வைரலாகும் வங்க தேச காணொலி
"காயமடைந்த ராணுவ வீரர்களை ஆம்புலன்ஸ் இல் கொண்டு செல்லும் போது, ராணுவத்தினரை குல்லா காரர்கள் படுத்தும் பாட்டை பாருங்கள்" என்ற கேப்ஷனுடன் 2 நிமிடங்கள் 34 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தொப்பி அணிந்துள்ள இஸ்லாமியர்கள் சிலர் கையில் தடியுடன் ராணுவ வீரரை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் ராணுவ கான்வாய் வாகனத்தை தடுத்து நிறுத்துகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக முதலில் அதனை ஆய்வு செய்தோம். அதில், ராணுவ வாகனத்தின் பதிவெண் வங்காள மொழியில் இருப்பது தெரியவந்தது. அதே போன்று, ராணுவ ஆம்புலன்ஸ் மற்றும் ராணுவ வீரர்களின் சீருடையில் உள்ள சிவப்பு நிற வட்ட வடிவிலான பேட்ஜில் குறுக்காக இருக்கும் இரு வாள்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது, நிலா பிறையும் சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு இது இந்திய ராணுவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடுகிறது.
(இடமிருந்து வலம்) வங்காள மொழி பதிவெண் கொண்ட ராணுவ வாகனம், ராணுவ சீருடையில் நிலா பிறை மற்றும் சிவப்பு நிற பேட்ஜ்
தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2021ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி The Bangladesh Defence Analyst என்ற ஃபேஸ்புக் பக்கம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொலியை பதிவிட்டுள்ளது. அதில், "வங்கதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சாலையை மறித்தனர். ஆனால், வங்கதேச ராணுவ ஆம்புலன்ஸை தடுக்க முடியவில்லை. இதற்கு முன்பு ராணுவத்தை அவர்கள் எதிர்கொண்டதில்லை என்பதால் அவர்கள் குழப்பத்துடனும், பதற்றத்துடன் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுளில் தேடுகையில், 2021ஆம் ஆண்டு வங்கதேச சென்ற பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்டகாங்கில் உள்ள ஹதசாரி பகுதியில் வன்முறை வெடித்தது குறித்து Dhaka Tribune செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஹதசாரியில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சிட்டகாங்-கக்ராச்சாரி நெடுஞ்சாலையை மறித்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மூன்று நாட்கள் வன்முறை மோதல்களுக்குப் பிறகு மார்ச் 28 ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது" என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய ராணுவ பேட்ஜையும் வங்க தேச ராணுவ வீரர்களில் பேட்ஜையும் இணையத்தில் உள்ள புகைப்படங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்த போது, வைரலாகும் காணொலியில் இருப்பது வங்க தேச ராணுவத்தின் சீருடை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலியில் நடைபெற்ற சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது இல்லை என்றும் அது வங்கதேசத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.