உஜ்ஜயினி முகரம் ஊர்வலம்; பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனரா இஸ்லாமியர்கள்?

உஜ்ஜயினி முகரம் ஊர்வலத்தின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பிய இஸ்லாமியர்கள் என சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  14 Nov 2023 5:24 AM GMT
உஜ்ஜயினி முகரம் ஊர்வலம்; பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனரா இஸ்லாமியர்கள்?

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று இஸ்லாமியர்கள் கோஷமிட்டதாக வைரலாகும் காணொலி

"உஜ்ஜயினி நகரத்தில் சமீபத்திய முகரம் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பினர். அது நடந்த இரண்டாம் நாள் அந்த நகரத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் காவிக் கொடியுடன் பள்ளிவாசல் முன்பு கூடி"பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்; பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்" என்று கோஷமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கூடிய இந்து மக்களின் கூட்டத்தைப் பாருங்கள். இனி இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவார்களா?" என்ற தகவலுடன் காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “2017- குல்பர்கா ராமநவமி உட்சவம்” என்ற தலைப்பில் RAM NAVAMI UTSAV GULBARGA என்ற யூடியூப் சேனல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வைரலாகும் காணொலியில் உள்ள ஆதே சாலையும், மசூதியும் உள்ளதை நம்மால் காண முடிகிறது. இதன் மூலம் இது கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடைபெற்ற நிகழ்வு என்று கூற முடிகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, Bhakti Sagar AR Entertainments என்ற யூடியூப் சேனலில் 2019ஆம் ஆண்டு குல்பர்கா ராமநவமி தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது. அதுவும், வைரலாகும் காணொலியும் ஒருசேர உள்ளது.

குல்பர்கா ராமநவமி உட்சவம்

மேலும், வைரலாகும் காணொலியில் உள்ள மசூதி மற்றும் சாலையுடன் கூடிய புகைப்படத்துடன் தி இந்து கடந்த மார்ச் 30ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “குல்பர்காவில் வியாழன்(மார்ச் 30) அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவிக்கொடி ஏந்தியபடி ராமநவமி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

ரமழான் நோன்பில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் காதிரி சாமன் தர்கா அருகே அலந்த் சோதனைச்சாவடி முதல் நாகா சர்கில் வரை நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ராம பக்தர்களுக்கு பழச்சாறு விநியோகித்தது மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது” என்று கூறப்பட்டுள்ளது.

அதே போன்று வைரலாகும் காணொலியில் வரும் ஆடியோவும் உண்மையான காணொலியில் உள்ள ஆடியோவும் வெவ்வேறாக இருந்தது. எனவே ஆடியோவில் வரும் "Pakistan Badwa Hai" என்ற முழக்கத்தை யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது Limra Times என்ற யூடியூப் சேனலில் அதே ஆடியோவுடன் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஒரு காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது என்று நம்மால் கூற முடிகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக உஜ்ஜயினியில் நடந்த முகரம் ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியதாக வைரலாகும் காணொலி உண்மையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தின் காணொலி என்றும் அதில் வரும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:Footage claims that Muslims chanted Pakistan zindabad at a Muharram procession in Ujjain
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story