“பங்களாதேசில் 43 வருடம் ஆசிரியராக பணிபுரிந்த சிறுபான்மை ஹிந்து ஆசிரியருக்கு அந்த நாட்டு பெரும்பான்மை பாயானுங்க சார்பில் நடத்தபட்டபிரிவு உபசார விழா இந்தியாவில் எந்த சிறுபான்மை இஸ்லாமிய ஆசிரியர்க்கும் இந்த கொடுமை நடந்தது இல்லை. வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பாதே சிறந்தது” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வங்கதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால் அவருக்கு மக்கள் செருப்பு மாலை அணிவித்த நிகழ்வு என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Taslima Nasrin என்ற எழுத்தாளர் கடந்த ஜூன் 19ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதன்படி, ராஜ்பரி மாவட்டத்தின் பலியகாண்டி உபாசிலாவில் மருத்துவர் அகமது அலி மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Dhaka Times 24 வெளியிட்டுள்ள செய்தி
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Dhaka Times 24 என்ற வங்காள மொழி ஊடகம் இது தொடர்பாக கடந்த ஜூன் 15ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், நவாப்பூர் ஒன்றியத்தில் உள்ள தெகாட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான அகமது அலி காலையில் பெருலி பஜாரில் உள்ள ஒரு தேநீர் கடையில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பலியகண்டி காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முகமது ஜமால் உதீன் கூறுகையில், நபிகள் நாயகத்தை பற்றி அவர் கூறிய கருத்து அப்பகுதியில் பரவியதும், ஒரு கும்பல் அவரை பிடித்து அடித்து உதைத்தது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை அமைதிப்படுத்தினர். மருத்துவரும் மீட்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த அகமது அலி, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி ஜமால் உதீன் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Kaler Kantho என்ற வங்காள மொழி ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் இஸ்லாமிய மருத்துவர் ஒருவர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த தவறான கருத்துக்காக அவரை அப்பகுதி மக்கள் செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவத்தை இந்து ஆசிரியருக்கு இஸ்லாமியர்கள் செருப்பு மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.