Fact Check: உபி-யில் உயிருக்கு போராடும் இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் காணொலியின் உண்மை என்ன?
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் உயிருக்கு போராடும் இஸ்லாமியர்கள் என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 4 March 2025 6:05 PM IST
Claim: உத்தர பிரதேசத்தில் உயிருக்கு பயந்து வாழும் இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் காணொலி
Fact: இத்தகவல் தவறானது. உண்மையில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக நடைபெற்ற இந்த மோதல், வங்கதேசத்தில் நடைபெற்றது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் தினம் தினம் உயிருக்காக போராடும் இஸ்லாமியர்கள் என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. அதில் இஸ்லாமியர்களை சிலர் கடுமையாக தாக்கப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Tanvir The Out Of Towner என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வங்காள மொழியில் “பயத்தை வெல்லுங்கள்” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து இதுகுறித்து தேடுகையில் இச்சம்பவம் வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்றது என்று Mohana Tv Ltd என்ற யூடியூப் சேனலில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்நிகழ்வு குறித்த தெளிவான தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இதனால், வங்கதேச உண்மை சரிபார்ப்பு ஊடகவியலாளர் Shohanur Rahman-ஐ எக்ஸ் பக்கத்தில் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது Nazmul Hoauqe Emu என்ற பேஸ்புக் பயனர் 2024ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பதிவிட்டு இருந்த பதிவு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில் வைரலாகும் காணொலியுடன் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, டாக்கா மாவட்டத்தின் சவர் உபாசிலாவின் தொழில் பேட்டையான அசுலியா ஜாம்க்ரா பகுதியில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்ததாக நில உரிமையாளரின் மூத்த சகோதரரை போதைப்பொருள் வியாபாரிகள் கத்தியால் குத்தி பலத்த காயத்தை ஏற்படுத்தினர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அசுலியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை கொண்டு இந்நிகழ்வு மதம் சார்ந்து நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் உயிருக்கு போராடும் இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் காணொலி உண்மையில் வங்கதேசத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்றும் தெரிய வருகிறது.
Claim Review:பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் உயிருக்கு போராடும் இஸ்லாமியர்கள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக நடைபெற்ற இந்த மோதல், வங்கதேசத்தில் நடைபெற்றது