நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் போட்டியிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்படும் விவசாயி சின்னத்துடன் கன்னட மொழி வாக்கியங்களுடன் பெண் வேட்பாளர் ஒருவரின் புகைப்பட பேனர் ஒன்று பிரசார வாகனத்தில் இடம்பெற்றுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக முதலில் அப்புகைப்படத்தை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தோம். அப்போது, அதில் உள்ள நபர் கர்நாடக மாநிலம் தேவதுர்கா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரூபா ஸ்ரீனிவாசா என்பது தெரியவந்தது.
கூகுள் ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்ட புகைப்படம்
மேலும், அவர் குறித்து விவரங்களை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவரது தேர்தல் வேட்புமனுவைத் தேடிய போது அவர் தேவதுர்கா(56) சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் என்பது தெரிய வந்தது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள படிவம் 7A யை கொண்டு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து தேடுகையில், அவருக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது உறுதி ஆகிறது.
வேட்பாளர் ரூபாவின் வேட்புமனு
தொடர்ந்து, அவரது சமூக வலைதள பக்கங்களில் தேடிய போது கடந்த மே 4ம் தேதி ரூபா தேவதுர்கா சட்டமன்ற தொகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை வெளியிட்டுள்ளார். அதில், 1:08 முதல் 1:15 வரையிலான பகுதியில் தற்போது வைரலாக கூடிய புகைப்படத்தில் உள்ள பிரசார வாகனம் மற்றும் பேனர் இருப்பதை அறிய முடிகிறது.
விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை குறிக்கும் படிவம் 7A
Conclusion:
நம் தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகக் கூடிய புகைப்படத்தில் இருப்பது கர்நாடக மாநிலம் தேவதுர்கா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ரூபா ஸ்ரீனிவாச நாயகா என்பதும் அவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதியாகிறது.