“உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள கட்டிடத்தில் நாம் தமிழரின் கட்சி பெயரும் நமது கட்சி சின்னமான ஒலி வாங்கியும். அமீரக வாழ் தமிழ் உறவுகளுக்கு நன்றி இதுபோன்று உலகெங்கும் பரவி வாழும் எங்கள் தமிழ் உறவுகள் நாம் தமிழர் கட்சியை காப்பாற்றுவோம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னமான ஒலி வாங்கியும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் புகைப்படமும் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி வைரலாகும் இதே காணொலி குரு கோவிந்த் சிங்கின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலானது தெரியவந்தது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்பதை நம்மால் கூற முடிகிறது. மேலும், அக்காணொலியில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் எடிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதேசமயம், குரு கோவிந்த் சிங்கின் புகைப்படம் உண்மையில் புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒலிபரப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் இதுபோன்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னமான ஒலி வாங்கி, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒலிபரப்பப்பட்டதா என்று தேடியதில் அவ்வாறாக எந்த காணொலியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், கடைசியாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்திற்காக ஒரு காணொலி வெளியிடப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சிக்கு மார்ச் 22ஆம் தேதி தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு காணொலிகள் மட்டுமே புர்ஜ் கலிஃபாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக புர்ஜ் கலிஃபாவில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் ஒளிபரப்பப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.