Fact Check: தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனரா நளினி - முருகன் தம்பதியர்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் தம்பதியர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:நளினி - முருகன் தம்பதியர் தங்களது தூக்கு தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆதிரை என்ற மகளும் உள்ளது
Fact:இத்தகவல் தவறானது. நளினி - முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நளினி கைது செய்யப்படும் போதே இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அவர்களது மகளின் பெயர் ஹரித்ரா
“ராஜீவ் கொலை குற்றவாளி நளினியின் முருகனும் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஜெயில்லேயே காதலித்து பரோலில் வெளிவந்து கல்யாணம் பண்ணி ஒரு மாதம் தேன்நிலவு கொண்டாடி அதில் பிறந்த மகள் தான் ஆதிரை இதற்கு பிறகு நளினியும் முருகனும், ஆதிரை என்ற குழந்தைக்கு தாய் தகப்பன் என்பதால் இவர்களை தூக்கிலிட்டால் குழந்தை அநாதையாகி விடும் என்று கூறி வழக்கு தொடுத்து நளினிக்கு மட்டும் முதலில் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, எப்படி நாடகம் ஆடி சட்டத்தை பகடைக்காயாக ஆக்கினார்கள் பாருங்க… அதோடு தூக்கு தண்டனை கைதிக்கு பிறந்த குழந்தை இங்கிலாந்திலுள்ள மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்து இப்ப நளினி மகள் ஆதிரை தற்போது மருத்துவராகிவிட்டார், திருமணமும் நடந்து சுக வாழ்வு வாழ்கிறார்…
ஆனால் நளினி பேரறிவாளன் முருகன் எல்லாம் கூட்டு சேர்ந்து செய்த படுபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 18 குடும்பம், அதில் காயமடைந்து நிரந்தர ஊனமுற்று நடைப்பிணமாக ஆன 43 குடும்பத்திலுள்ள குழந்தைகள் யாரவது ஒருவருக்கு படிக்க உதவி செய்தார்களா?
இது என்ன அநியாயம் என்பதை பேரறிவாளன் விடுதலையை கொண்டாடி மீதியுள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய முயற்சிக்கும் இந்த வேளையில் பொது மக்கள் யோசிக்க வேண்டும்…” என்ற தகவலுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நளினி மற்றும் முருகன் ஆகியோர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பரவி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் வைரலாகும் இத்தகவலில் பல்வேறு தவறுகள் இருப்பது தெரிய வந்தது.
முதலில் நளினி மற்றும் முருகன் ஆகியோரின் திருமணம் குறித்த தகவலை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, “நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!” என்ற தலைப்பில் விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
விகடன் வெளியிட்டுள்ள செய்தி
அதன்படி, “நளினியின் சகோதரர் பாக்யநாதன் ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் பணியாற்றி வந்தார். அச்சமயம் முருகன் அறிமுகமானார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் முருகன். அச்சமயம் தங்குவதற்கு இடமில்லாததால் புலிகள் மீது ஏற்கனவே அனுதாபம் கொண்டிருந்த பாக்கியநாதன் தனது வீட்டில் முருகனை தங்க வைத்திருந்தார். நாளடைவில் தனது தாய் பத்மாவதி மற்றும் சகோதரி நளினி ஆகியோருடன் நன்கு அறிமுகமாகி, அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விடுகிறார் முருகன்.
ஒரு பிரச்சினையில் நளினி அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வில்லிவாக்கத்திலுள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் நளினியை அவரின் தாயாருடன் சமரசம் பேசி சேர்த்து வைத்தார் முருகன். இதில் அவர் மீது பிரியம் கொண்டு, அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் 1991ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று நளினி, அவரின் கணவர் முருகனுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். அப்போது, நளினி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார்.
தொடர்ந்து, சிறையிலேயே குழந்தையைப் பெற்று வளர்த்தார் நளினி. ஹரித்ரா எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தை, ஐந்து வயதிற்கு பின்னர் நளினியின் சக சிறைவாசி ஒருவர் கோவைக்கு அழைத்து வந்து அவரை வளர்த்துப் படிக்க வைத்தார். பிறகு முருகனின் தாயாருடன் இலங்கைக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து இங்கிலாந்திற்கு சென்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நளினி மற்றும் முருகன் தம்பதியர் சிறை தண்டனை அனுபவிக்கும் முன்பே காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்றும் அவர்களுக்கு ஹரித்ரா என்ற மகளும் இருப்பது தெரிய வருகிறது. இதே தகவலை The News Minute ஊடகமும் அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினிக்கு 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை மட்டுமே பரோல் வழங்கப்பட்டிருந்தது. 2016இல் முதன் முதலாக தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இவருக்கு 12 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது என்று BBC Tamil செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அச்சமயம் முருகன் பரோலில் வந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை.
BBC Tamil வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
முடிவாக, நம் தேடலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் தம்பதியர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே இருவரும் காதலித்து பரோலில் வெளியே வந்து திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டதாக வைரலாகும் தகவலில் உண்மை இல்லை. உண்மையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டனர் என்றும் அவர்களுக்கு பிறந்த மகளின் பெயர் ஆதிரை என்றும் தெரியவந்தது. மேலும், நளினி கைது செய்யப்படும் போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.