பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் அதே போட்டியில் தங்கம் வென்றார். இந்நிலையில், மைதானத்தில் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோர் இணைந்து இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடைபெற்றது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி Hindustan Times செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கம் வென்றார், இரண்டாவது இடத்தைப் பிடித்த நதீம், போட்டியின் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு முதல் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவும், வெண்கலம் வென்ற செக் நாட்டு வீரரான ஜக்குப் ஆகியோர் தங்கள் நாட்டு கொடிகளுடன் கேமராக்களுக்கு முன்னால் போஸ் கொடுத்தனர். அப்போது, வெள்ளி வென்ற நதீம் இடம்பெறவில்லை. இந்நிலையில், தனது நாட்டு கொடி இன்றி நின்று கொண்டிருந்த நதீமை அழைத்து இந்தியக் கொடியுடன் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோர் ஜோடியாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Times of India வெளியிட்டுள்ளது. மேலும், வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள நிகழ்வு JioCinema தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள காணொலியின் 9:29 பகுதியில் இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோர் இணைந்து இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக வைரலாகும் காணொலி தவறானது. உண்மையில் அது புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.