லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து நேற்று (ஆகஸ்ட் 14) வெளியானது ‘கூலி’ திரைப்படம். இந்நிலையில், "ஏன்டா வந்தோம்னு இருக்கு. இந்த ஷோவோட நிறுத்திக்கோங்க, யாரும் வந்துட வேண்டாம். ஒரு சின்ன சீன் கூட நல்லா இல்ல" என்று இளைஞர் ஒருவர் கூலி திரைப்படத்திற்கு விமர்சனம் கூறியதாக காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இவர் பேசியது Liger திரைப்படத்திற்கான விமர்சனம் என்று தெரிய வந்தது.
உண்மையில் வைரலாகும் காணொலியில் இருக்கும் நபர் ‘கூலி’ திரைப்படத்தை தான் விமர்சனம் செய்தாரா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, PGD King என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி ‘வேட்டையன்’ திரைப்படத்தின் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேடுகையில் இதே காணொலியை நடிகர் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்பட போஸ்டருடனும் வெளியிட்டுள்ளனர் என்று தெரியவந்தது.
'வேட்டையன்' மற்றும் 'விடாமுயற்சி' திரைப்படங்களுடன் தவறாக பகிரப்பட்ட காணொலி
தொடர்ந்து, காணொலியில் இடம் பெற்றுள்ள Voice of Madras என்ற யூடியூப் சேனலில் இதே காணொலி இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து தேடினோம். அப்போது, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இதே காணொலி Voice of Madras யூடியூப் சேனலில் ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், காணொலியில் எந்த திரைப்படத்திற்கு இவ்வாறான விமர்சனத்தை அளித்தனர் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. காணொலியின் ஒரு பகுதியில் “மைக் டைசன் வரக்கூடிய காட்சி எவ்வாறு உள்ளது?” என்று நேர்காணல் செய்பவர் கேள்வி எழுப்புகிறார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியான Liger திரைப்படத்தில் தான் மைக் டைசன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, Liger திரைப்படத்தின் விமர்சனம் Voice of Madras யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளதா என்று தேடியதில் வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள அதே நபர்கள் இருக்கக்கூடிய முழு நீள காணொலி Liger திரைப்படத்தின் பொதுமக்கள் கருத்து என்ற தலைப்பில் அதே தேதியில் வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்திற்கு பொதுமக்கள் அளித்த எதிர்மறையான கருத்து என்று வைரலாகும் காணொலி உண்மையில் 2022ஆம் ஆண்டு வெளியான Liger திரைப்படத்திற்கானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.