Fact Check: 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளதா? உண்மை அறிக

புதிதாக 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக வைரலாகும் காணொலி

By Ahamed Ali
Published on : 5 April 2025 11:40 PM IST

Fact Check: 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளதா? உண்மை அறிக
Claim:அரசாங்கம் புதிதாக 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளன
Fact:இவை இரண்டும் நினைவு நாணயங்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்கானது அல்ல

இந்திய அரசாங்கம் புதிய நாணயங்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், “புதிய நாணயங்கள் வந்துவிட்டன. அரசாங்கம் 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளன” என்று ஆடியோ பதிவாகியுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் காணொலியின் காண்பிக்கப்படும் இரண்டு நாணயங்களும் நினைவு நாணயங்கள் என்பது தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை அறிய காணொலியை முதலில் ஆய்வு செய்தோம். அதில், 125 ரூபாய் நாணயத்தின் பின்பகுதியில் அம்பேத்கரின் புகைப்படத்துடன் “125th birth anniversary of BR Ambedkar” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 500 ரூபாய் நாணயத்தின் பின்பகுதியில் “Shri Krishna Chaitanya Mahaprabhu Coming to Vrindawan Coin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கிடைத்த இரண்டு தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2015ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி Financial Express ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நினைவு நாணயங்களை வெளியிட்டார். இந்த நாணயங்கள், '10 ரூபாய்' மற்றும் '125 ரூபாய்' மதிப்புடையவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Financial Express வெளியிட்டுள்ள செய்தி

இரு நாணயங்களையும் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கரின் சாதனைகளை குறிப்பிட்டு உரையாற்றினார் என்று NDTV அதே தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், Numista என்ற இணையதளத்தில் வைரலாகும் அதே நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும், இந்த நாணயம் 2015ஆம் ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்த நாளின் போது வெளியிடப்பட்ட நினைவு நாணயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 500 ரூபாய் நாணயம் குறித்து தேடினோம். அப்போது, 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி PIB இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பிருந்தாவனத்திற்கு வந்ததன் 500வது ஆண்டு விழாவை (500th Anniversary of Shri Krishna Chaitanya Mahaprabhu’s Coming to Vrindavan)” நினைவுகூரும் வகையில், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ நரேந்திர குமார் சின்ஹா, இன்று 500 ரூபாய் மதிப்புள்ள புழக்கத்தில் இல்லாத நினைவு நாணயத்தையும் 10 ரூபாய் மதிப்புள்ள புழக்க நாணயத்தையும் வெளியிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Times of India ஊடகமும் வெளியிட்டுள்ளது.


Times of India வெளியிட்டுள்ள செய்தி

மேலும், இந்த நாணயம் India Govt Mint என்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விற்பனைக்கு தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சமீபத்தில் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி அவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இதுபோன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு நிகழ்வுகளில் இத்தகைய நினைவு நாணயங்களை அரசாங்கம் வெளியிடுவது வழக்கம்.

Conclusion:

நம் தேடலில் முடிவாக புதிதாக 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவை நினைவு நாணயங்கள் என்றும் தெரியவந்தது.

Claim Review:புதிதாக வெளியிடப்பட்டுள்ள 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்கள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:இவை இரண்டும் நினைவு நாணயங்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்கானது அல்ல
Next Story