Fact Check: பான் 2.0 திட்டத்தின் கீழ் வீட்டு முகவரிக்கு புதிய பான் கார்டை அனுப்பி வைக்குமா அரசாங்கம்? உண்மை என்ன?

புதிய பான் கார்டை பான் 2.0 திட்டத்தின் கீழ் அரசாங்கம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  13 Dec 2024 11:57 PM IST
Fact Check: பான் 2.0 திட்டத்தின் கீழ் வீட்டு முகவரிக்கு புதிய பான் கார்டை அனுப்பி வைக்குமா அரசாங்கம்? உண்மை என்ன?
Claim: பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டை வீட்டு முகவரிக்கு அரசாங்கமே அனுப்ப உள்ளது
Fact: இத்தகவல் தவறானது. புதிதாக பான் கார்ட் கோரும் வரை எந்த காரணத்திற்காகவும் புதிய பான் கார்டு வழங்கப்படாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது

டைனமிக் QR Code, பயனர்களுக்கான அணுகலை எளிதாக்க அனைத்து PAN/TAN தொடர்பான சேவைகளுக்கும் ஒரே இணையதள போர்டல் உள்பட பல்வேறு புதிய அம்சங்களுடன் பயன் 2.0 என்ற திட்டத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், “மத்திய அரசின் புதிய பான் கார்டு பதிப்பு, PAN 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

புதுப்பிக்கப்பட்ட புதிய பான் கார்டை உங்கள் முகவரிக்கு அரசாங்கம் நேரடியாக அனுப்பும். கவனமாக இருங்கள். பான் கார்டு புதுப்பிப்புக்கான போன், மெசேஜ், மெயில் எதற்கும் பதிலளிக்க வேண்டாம். எந்த தகவலும் அல்லது OTP ஐயும் கொடுக்க வேண்டாம். இல்லை என்றால் இல்லை. கவனமாக இருங்கள், இணைய மோசடிகளைத் தவிர்க்கவும்” என்று சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் மூலம் புதிய பான் கார்டை வீட்டு முகவரிக்கு நேரடியாக அரசாங்கமே அனுப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் புதிய பான் கார்டை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரியவந்தது.

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி Times of India இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, “கடந்த நவம்பர் 26ஆம் தேதியிட்ட செய்திக்குறிப்பில் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டை ரூபாய் 50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதேபோன்று ரூபாய் 15 மற்றும் போஸ்டல் கட்டணத்தை செலுத்தி இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டு பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தெரிய வருகிறது.


Times of India வெளியிட்டுள்ள செய்தி

கிடைத்த தகவலைக் கொண்டு நவம்பர் 26ஆம் தேதி வருமானவரித்துறை பான் 2.0 தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை ஆய்வு செய்தோம். அதன்படி, ஏற்கனவே பான் கார்டு வைத்துள்ளவர்கள் பான் 2.0 திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பான் வைத்திருப்பவர்கள் தங்களின் தற்போதைய பான் எண்ணில் ஏதேனும் திருத்தம்/புதுப்பிப்புகளைச் செய்ய விரும்பினால் அதாவது, மின்னஞ்சல், மொபைல் எண், முகவரி போன்ற விபரங்கள் அல்லது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பான் 2.0 திட்டம் தொடங்கிய பிறகு அவர்கள் இலவசமாகச் செய்யலாம். பழைய பான் கார்ட் பான் 2.0 திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்.

அதேபோன்று பான் வைத்திருப்பவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிலுள்ள விபரங்களை மாற்றும் வரை பழைய பான் கார்டை மாற்றத் தேவையில்லை. மேலும், பான் வைத்திருப்பவர் அதில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிதாக பேன் கார்ட் கோரும் வரை எந்த காரணத்திற்காகவும் புதிய பான் கார்டு வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டை நம் முகவரிக்கு நேரடியாக அரசாங்கமே அனுப்புவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:வீட்டு முகவரிக்கு புதிய பான் கார்டை அனுப்பிவைக்க உள்ளது அரசாங்கம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, WhatsApp, Threads
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. புதிதாக பான் கார்ட் கோரும் வரை எந்த காரணத்திற்காகவும் புதிய பான் கார்டு வழங்கப்படாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது
Next Story