“அண்ணனுக்கு டபுள் ஆம்லேட்!” என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள செய்தி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “தன்னைப்போலவே முஷ்டி உயர்த்தி முழங்கும் உக்கிரம்மாள் ஒருவரை இப்போதெல்லாம் தங்கை என்று அழைப்பதில்லையாம் அண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட அண்ணியார் கட்சிக்குள்ளேயே தனக்கு விசுவாசமான பெண்ணொருவரிடம் உக்கிரம்மாளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.
விஷயத்தை ஊகித்த எதிர்த்தரப்போ, யாரை யார் வேவு பார்ப்பது? வீட்டில் தான் அவர் உனக்குச் சொந்தம் வெளியில் வந்துவிட்டால் எனக்கே சொந்தம் என்று உஷ்ணமாகியிருக்கிறது. கத்திரிக்காய்கள் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் அவர்களையும் குறிப்பிட்டு இப்படியொரு செய்தியை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டு இருப்பதாக இப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். காளியம்மாள் தற்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய 2022ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி குமுதம் இதழை தேடினோம். அப்போது, அப்புத்தகத்தின் 4ஆம் பக்கத்தில், சீமான் மற்றும் காளியம்மாள் பற்றி இடம்பெற்றதாகப் வைரல் செய்யப்படும் செய்தி போன்று ஏதும் இடம்பெறவில்லை.
மாறாக, “பீகாரில் கள்ளச்சாராய மோதல்! பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் இறந்து போனார்கள். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று பா.ஜ.க. போராடியது…” என்று பாஜக தொடர்பான செய்தியே இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.
குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளதா என்று போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்து பார்த்ததில், அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோரைக் குறிப்பிட்டு குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்தி வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.