Fact Check: தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை புல்டோசர் உதவியுடன் மீட்ட நபர்? உண்மை என்ன?

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் புல்டோசர் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதாக வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  8 Sept 2024 1:16 AM IST
Fact Check: தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை புல்டோசர் உதவியுடன் மீட்ட நபர்? உண்மை என்ன?
Claim: தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை புல்டோசர் உதவியுடன் மீட்ட நபர்
Fact: இத்தகவல் தவறானது உண்மையில் இது சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்வு

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், “கம்மம் பிரகாஷ் நகர் பாலம் அருகே ஜேசிபி டிரைவர் சுபன் வெள்ளத்தில் இறங்கி காருக்குள் சிக்கிய பயணிகளை காப்பாற்றினார். அவர் சரியான நேரத்தில் செயல்பட்டதால் ஒன்பது பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அவரது வார்த்தைகள்: நான் தோல்வியுற்றால், நான் தனியாக இறந்துவிடுவேன். நான் திரும்பி வந்தால், நாங்கள் பத்து பேர் திரும்புவோம். ஒரு உண்மையான ஹீரோ” என்று கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, eremnews என்ற அரபு மொழி ஊடகம் கடந்த மே 2ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “சவூதியின் பிஷா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரை குடிமகன் ஒருவர் காப்பாற்றும் போது எடுக்கப்பட்ட காணொலி இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பிஷாவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் வெள்ளம் அடித்துச் செல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அய்த் பின் தகாஷ் அல் அக்லாபி (Ayed bin Daghash Al Aklabi) என்ற நபர் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரின் உயிரை புல்டோசர் உதவியுடன் காப்பாற்றினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை சவுதி அரேபிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகமான Al Ekhbariya மற்றும் Moroccan World News ஆகிய ஊடகங்கள் காணொலியாக செய்தி வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தெலுங்கானா மாநிலம் கம்மம் பிரகாஷ் நகர் பகுதியில் புல்டோசர் உதவியுடன் சுபன் என்பவர் வெள்ளத்தில் சிக்கிய ஒன்பது பேரை மீட்டதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:தெலுங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வரை புல்டோசர் உதவியுடன் நபர் ஒருவர் மீட்டதாக வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது உண்மையில் இது சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்வு
Next Story