Fact Check: லண்டன் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கமிஷன் பெற்றதாக நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாக பரவும் தகவலின் உண்மை என்ன?
வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்படுள்ள நீரவ் மோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்ததாக செய்தி ஒன்று பரவலாகி வருகிறது.
By Ahamed Ali Published on 21 Dec 2024 6:38 AM GMTClaim: வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்ததாகவும் அவர்களே அவரை நாட்டை விட்டு வெளியேற கூறினர்
Fact: லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். நிரவ் மோடியின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் என அனைத்தும் இந்திய அரசால் முடக்கப்பட்டன. இவர் தற்போது, லண்டன் கிரீன்விச்சில் உள்ள தேம்சைட் தனியார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்னை நாட்டை விட்டு ஓடிப்போக வற்புறுத்தினார்கள். வங்கியில் வாங்கிய கடன் முழுவதையும் நானாக எடுத்துக் கொள்ள வில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கமிஷனாக 456 கோடி எடுத்துக் கொண்டார்கள். அந்த 13000 கோடியிலும் எனக்கு கிடைத்தது 32% மட்டுமே. மீதி காங்கிரஸ் தலைவர்கள் எடுத்து கொண்டார்கள்” என்று லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாத சமூக வலைதளங்களில் (Archive) தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவ்வாறான எந்தவொரு வாக்குமூலத்தையும் நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் இவ்வாறான வாக்குமூலம் அளித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இவர் செய்த மோசடி பணத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்திருந்தால் அது மிகப்பெரும் செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், எந்த ஊடகமும் இவ்வாறான செய்தியை வெளியிடவில்லை.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை தொடர்பான செய்தியை Times of India கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருந்த நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜரானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, இந்தியாவிடம் உங்களை ஒப்படைக்க சம்மதமா என்று நீதிபதி மல்லன் அவரிடம் கேட்கவே. அவர் தெளிவான குரலில், "நான் சம்மதிக்கவில்லை” என்று பதிலளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிற அவர் நீதிமன்றத்தில் வேறு ஏதும் பேசவில்லை என்பது Times of India வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரியவருகிறது.
தொடர்ந்து, நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான வழக்கு தொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு லண்டன் நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில், வைரலாகும் பதிவில் இருப்பது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்பது தெளிவாகிறது.
நம் தேடலில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்ததாகவும் அவர்களே அவரை நாட்டை விட்டு வெளியேற கூறியதாகவும் லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர் அவ்வாறாக எந்த ஒரு வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.