“தமிழ்நாட்டில் நாளை குலதெய்வ கோவில்கள் திறக்க தடை! ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோவில்கள் நாளை திறக்க கூடாது என ஒன்றிய அமைச்சர் வாய்மொழி உத்தரவு.” என்று நேற்றைய(ஜனவரி 21) தேதியிட்ட தினமலர் ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியில் எந்த அமைச்சர் என்று பெயர் குறிப்பிடாமல் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தை மட்டும் வைத்து இந்த நியூஸ் கார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட உத்தரவு என்பது போன்ற தெரிகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிய அவ்வாறாக எந்த உத்தரவையும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறப்பித்தாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 21ஆம் தேதி பிபிசி தமிழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஜனவரி 22ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகளோ அல்லது அன்னதான நிகழ்வுகளோ நடக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகவும்,
அயோத்தியில் நடக்கும் நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் போது மின்சாரத் தடை ஏற்படும் என்று கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு கூறப் பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த தனியார் செய்தித்தாளின் செய்தியை பகிர்ந்து தமிழ்நாடு அரசின் இந்து எதிர்ப்பு மனநிலையை கண்டிப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்திக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான ஊடகங்கள் நிர்மலா சீதாராமன் தொடர்பாக கடைசியாக இச்செய்தியை மட்டுமே வெளியிட்டுள்ளன.
வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை, அமைச்சரும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிரவும் இல்லை. தொடர்ந்து, தினமலரின் சமூக வலைதளப் பக்கங்களில் நேற்றைய தேதியில் தேடிய போது அவ்வாறான எந்த நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது தான் என்று தினமலர் தரப்பு நியூஸ் மீட்டரிடம் உறுதிபடுத்தி உள்ளது.
Conclusion:
இறுதியாக, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை இன்று திறக்க கூடாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய்மொழி உத்தரவிட்டதாக வைரலாகும் தினமலரின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.