“தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்?” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக புதிய தலைமுறை ஊடகத்தின் கடந்த 24ஆம் தேதியிட்ட நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது தான் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதுபோல பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வின் இவ்வாறாக நிர்மலா சீதாராமன் கூறவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்ட் போலி என்று புதிய தலைமுறை விளக்கமளித்துள்ளது. இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜூலை 26ஆம் தேதி இந்து தமிழ் திசை ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அது தொடர்பான விளக்கத்தில், “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை“ என்று கூறியுள்ளார். மேலும், வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ளது போன்ற எந்த ஒரு தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி புதிய தலைமுறை இவ்வாறான செய்தியை வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். ஆனால், அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் அது வெளியிடவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்ட் உள்பட நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய பட்ஜெட் தொடர்பான நான்கு நியூஸ் கார்டுகளை போலி என்றும் அதனை தாங்கள் வெளியிடவில்லை என்றும் புதிய தலைமுறை ஊடகம் தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.
விளக்கம் அளித்துள்ள புதிய தலைமுறை ஊடகம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாஜகவை புறக்கணித்ததால் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்து போதிய நிதி ஒதுக்கவில்லை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.