அமர்த்தியா சென் தமிழ்நாடு குறித்து கூறியதை திரித்துப் பரப்பும் நெட்டிசன்கள்!
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தமிழ்நாடு மற்றும் கேரளா குறித்து கூறிய கூற்றை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
By Ahamed Ali Published on 26 Oct 2022 4:43 PM IST"தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்தால் உலகில் பதினெட்டாவது பெரிய நாடாகவும், பொருளாதார ரீதியில் வல்லரசு நாடாகவும். சிறந்து இருக்கும்" என்று 1998-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூறியதாக பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
இதுகுறித்து உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக புகைப்படத்தில் இருக்கக்கூடிய தகவல்களைக் கொண்டு கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஒன் இந்தியா தமிழ் இது தொடர்பாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய 'நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்(An Uncertain Glory: India and Its Contradictions)' என்ற நூலில் ''தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்றெல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்; உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இந்த ஒப்பீடுகளில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், பன்முகம் கொண்ட ஒரு நாடு, மிக வெற்றிகரமான செயலாக்கம்மிக்க அந்த நாட்டு மாநிலங்களில் இருந்து உருவாகும் அனுபவங்களிலிருந்தே படிப்பினைகளைப் பெற முடியும்" என்று இருவரும் எழுதி இருப்பது குறித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அது குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
தமிழகம் குறித்து புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கம்
தொடர்ந்து, அப்புத்தகத்தினை இன்டர்நெட் ஆர்கைவ்ஸ் என்ற இணையதளத்தில் நம்மால் இலவசமாக படிக்க முடிந்தது. அப்புத்தகத்தின் 72-வது பக்கத்தில், ''Several Indian states - Kerala and Tamil Nadu, for example, would be at the top of the South Asian comparisons if they were treated as separate countries, and others- Uttar Pradesh and Madhya Pradesh, for example - would do enormously worse. But what is most powerfully apparent from these interstate comparisons within India is just how much this diverse country can learn from the experiences of the more successful states within it(தமிழ் மொழிபெயர்ப்பு - தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்ற எல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்; உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இந்த ஒப்பீடுகளில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், பன்முகம் கொண்ட ஒரு நாடு, மிக வெற்றிகரமான செயலாக்கம்மிக்க அந்த நாட்டு மாநிலங்களில் இருந்து உருவாகும் அனுபவங்களிலிருந்தே படிப்பினைகளைப் பெற முடியும்)" என்று எழுதியுள்ளனர்.
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், "தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்தால் உலகில் பதினெட்டாவது பெரிய நாடாகவும், பொருளாதார ரீதியில் வல்லரசு நாடாகவும். சிறந்து இருக்கும்" என்று அமர்த்தியா சென் கூறவில்லை. மாறாக, "இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்றெல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்" என்று அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகியோர் கூறி இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.