"வட நாட்டுல பார்ப்பன பாரதிய ஜனதா கட்சி ஏன் ஜெயிக்கிறது என்று இப்ப தெரியுதா…", "மாட்டு சாணி ஜுஸ் 50 ரூபாய். வட தேஸ மாநிலங்கள் மானுட சமூகத்தை விட்டு விலகி மிருகங்களை விட இழிவாகப் போய்க் கொண்டிருக்கின்றன!..." என்பது போன்ற கேப்ஷன்களுடன் 43 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் பச்சை நிறத்தில் உருட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை நீரில் கரைத்து அதை பானமாக மாற்றி விற்பனை செய்கிறார். அவற்றை பலரும் வாங்கிப் பருகினர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய, அக்காணொலியில் இருந்த "YOURBROWNFOODIE" என்று வாட்டர்மார்க்கைக் கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தபோது, "YourBrownFoodie" என்ற யூடியூப் சேனல் கிடைத்தது. அதில் தேடுகையில், "Mathura mein Bhang ke deewane log…" என்ற தலைப்பில் தற்போது வைரலாகும் காணொலியின் முழு நீள காணொலி கிடைத்தது.
அதன் விளக்கப் பகுதியில், காணொலியில் இருப்பது பாங்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, "bhang making" என்று யூடியூபில் தேடிய போது வைரலாகும் காணொலியைப் போன்று பல்வேறு காணொலிகள் நமக்கு கிடைத்தன. இவை பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் மாட்டுச் சாணம் போல் இருப்பதால் இதனை மாட்டுச் சாண ஜூஸ் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும், நார்காட்டிக் மருந்துகள் மற்றும் சைக்கோட்ராப்பிக் பொருள்கள் சட்டம், 1985 கஞ்சா செடியின் இலைகளைத் தவிர்த்து பழம் மற்றும் பூவைப் பயன்படுத்துவதை மட்டுமே குற்றமாக்குகிறது. பாங்கு பானம் கஞ்சா செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதனை விற்பனை செய்வதும், அருந்துவதும் குற்றமாகாது என்றே கூறப்படுகிறது. வடமாநிலங்களில் சிவராத்திரி, ஹோலி போன்ற பண்டிகைகளின் போது இப்பானம் பிரபலமாக விற்கப்படுகின்றன.
Conclusion:
இறுதியாக, வடமாநிலங்களில் 50 ரூபாய்க்கு மாட்டு சாண ஜுஸ் விற்கப்படுவதாக பரவும் தகவல் மற்றும் காணொலியில் உண்மையில்லை என்றும் அவை பாங்கு பானம் தயாரிக்கும் காணொலி என்றும் நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்த முடிகிறது.