“அண்ணே.. அதிபர் சீமானை ‘அயோக்கிய பயலா நீ’ என்று கேட்காமல் நறுக்கென்று நன்றாக கேட்டீங்க போங்க..! மனசு இதமா இருக்கு ணே…!” என்ற கேப்ஷனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விருது நிகழ்ச்சியில் இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
அதில், “சீமான் கையால் இந்த மேடையில் விருது வாங்கியிருக்கிறீர்கள், சீமான் அவர்களுக்கும், தமிழ் சொந்தங்களுக்கும் என்ன சொல்ல விரும்புறீர்கள்” என்று தொகுப்பாளர், விருது பெற்ற பத்திரிக்கையாளர் ஆவுடையப்பனிடம் கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த ஆவுடையப்பன், “சத்துணவு மாதிரியான திட்டங்களில் நிறை குறைகள் இருக்கலாம். குறைகள் இருந்தால் அவை நிச்சயம் சரி செய்யப்படவேண்டும். அதற்காக இந்த திட்டத்தையே மோசம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லோருடைய வயிற்றையும் பட்டினி ஆக்க பார்க்கிறீர்கள். சத்துணவு வேண்டாம், காலை உணவுத் திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்களை அயோக்கியன் என்று சொல்லலாம்” என்கிறார். இதன்மூலம் சத்துணவு திட்டம் தொடர்பாக சீமானை அசிங்கப்படுத்திய ஆவுடையப்பன் என்று கூறி காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய பரவி வரும் காணொலி குறித்து தேடினோம், அப்போது கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கோல்டன் மொமண்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியின் முழுநீளக் காணொலி ஜீ தமிழ் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், சரியாக 1:18:29 பகுதியில் பரவி வரும் காணொலியின் பகுதி உள்ளது.
அதில் பேசும் ஆவுடையப்பன், “ரொம்ப நன்றி ஜீ தமிழ், மேடைக்காக நான் சொல்லவில்லை. அண்ணன் சீமான் கையால் விருது வாங்கியதில் மகிழ்ச்சி. சீமான் அவர்களின் கருத்தியல், அரசியல் என்ன என்பது குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால், அண்ணனிடம் நான் பார்த்து வியந்த விஷயம் என்னவென்றால் அவருடைய எனர்ஜி தான். காலையில் இருந்து மாலை 5 மணி வரை பேசிவிட்டு, இரவு பொதுக்கூட்டத்தில் பேச அழைத்தாலும் கூட, கையை ஓங்கி “நாம் தமிழர்’ என்று பேசுவார். ஆனால், அவரிடம் இது எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் தெரியவில்லையே பா என்று சொல்வார்” என்கிறார்.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் ஆவுடையப்பன் பேசுவது குறித்து ஜீ தமிழ் இணையதளத்தில் “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் தேடினோம். அப்போது, கடந்த மே 26ஆம் தேதி அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியின், 44வது தொகுப்பின் 34:51 பகுதியில் ஆவுடையப்பன் பேசுகிறார். அதில், “சத்துணவு மாதிரியான திட்டங்களில் நிறை குறைகள் இருக்கலாம். குறைகள் இருந்தால் அவை நிச்சயம் சரி செய்யப்படவேண்டும். அதற்காக இந்த திட்டத்தையே மோசம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாருடைய வயிற்றையும் பட்டினி ஆக்க பார்க்கிறீர்கள். சத்துணவு வேண்டாம், காலை உணவுத் திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்களை அயோக்கியன் என்று சொல்லலாம்” என்கிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, தமிழா தமிழா நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் பேசிய ஆடியோவை, சீமான் மற்றும் ஆவுடையப்பன் கலந்து கொண்ட ஜீ தமிழ் விருது நிகழ்ச்சியின் காணொலியோடு எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.