இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
இந்நிலையில், பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், "Last, best hope of earth" WORLD'S MOST LOVED AND MOST POWERFUL LEADER, IS HERE TO BLESS US (தமிழ் மொழிபெயர்ப்பு: "பூமியின் கடைசி, சிறந்த நம்பிக்கை" உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் சக்திவாய்ந்த தலைவர், எங்களை ஆசீர்வதிக்க இங்கே வந்திருக்கிறார்) என்ற தலைப்பில் ஹெட்லைன்ஸில் செய்தி வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இத்தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது 2021ஆம் ஆண்டு இதே தகவல் வைரலானது தெரியவந்தது. மேலும், தற்போது வைரலாகும் புகைப்படத்தில் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் தேதி தெளிவாக இல்லை. ஆனால், ஏற்கனவே வைரலான புகைப்படத்தில் செப்டம்பர் 26, 2021ம் ஆண்டு என்ற தேதி இடம்பெற்று இருந்தது. அந்த தேதியில் வெளியான நியூயார்க் டைம்ஸின் ஹெட்லைன்ஸ் பக்கத்தை ஆய்வு செய்ததில் தற்போது வைரலாகும் செய்தி இடம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
நியூயார்க் டைம்ஸின் ஹெட்லைன்ஸ்
மேலும், வைரலாகும் செய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக 2021ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நியூயார்க் டைம்ஸின் மக்கள் தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில், "இது முழுக்க முழுக்க புனையப்பட்ட படம்" என்று கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸின் மக்கள் தொடர்பு துறையின் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் அது உண்மை இல்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.