இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவதும் அவர்களது வீடுகள் அரசாங்கத்தால் இடிக்கப்படுவதும் என பல்வேறு விதமான ஒடுக்குமுறைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில், “முஸ்லிம்களின் துண்புறுத்தலை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால்… ஓமானிலுள்ள 1 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்!” என்று ஓமன் நாட்டு இளவரசி எச்சரிக்கை விடுத்ததாக சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவ்வாறான எச்சரிக்கையை அவர் விடுக்கவில்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளது தெரியவந்தது.
இத்தகவலின் உண்மை தன்மையை கண்டறிய உண்மையில் அவ்வாறான ஒரு எச்சரிக்கையை ஓமன் இளவரசி சயீதா மோனா வெளியிட்டாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவர் அவ்வாறான எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக Hindustan Times 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதன்படி, ஓமான் நாட்டு இளவரசி Sayyida Mona bint Fahd al Said-ன் பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டகாரர்கள் சிலர், “ஓமனில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றப்போவதாக” வெளியிட்ட தகவலில் உண்மை இல்லை என்றும் அவ்வாரான அறிவிப்பை ஓமன் இளவரசி வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஓமனில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பதிவிட்டிருக்கும் கணக்கிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எனது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கீழ்கண்ட சமூக வலைதள பக்கங்களில் காணலாம்” என்று ஓமன் இளவரசியின் அதிகாரப்பூர்வ கணக்குகளின் பயனர் பெயரை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இளவரசியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இத்தகவலை ஓமன் நாட்டின் அன்றைய தூதரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நம் தேடலில் முடிவில் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால் ஓமன் நாட்டில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நாட்டு இளவரசி அறிவித்ததாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவ்வாறான அறிவிப்பை அவர் வெளியிடவில்லை என்றும் இளவரசியே விளக்கம் அளித்துள்ளார்.