“நீரடித்து நீர் விலகுவதில்லை என்பார்கள்... ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலும் பசிபிக் பெருங்டலும் நிரால் இணைவதே இல்லை என்பதற்கு இந்த வீடியோ சாட்சி…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வெவ்வேறு நிறத்துடைய இரண்டு நீர்ப்பரப்பு ஒட்டாமல் இருக்கும் காணொலிகள் எடிட் செய்யப்பட்டு பகிரப்படுகிறது. மேலும், அவை அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி Live Science இதுகுறித்த மிக நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தது.
Live Science வெளியிட்டுள்ள செய்தி
அதன்படி, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் தொடர்ந்து கலக்கிறது என்கிறார் சிலியில் உள்ள கான்செப்சியன் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வாளர் நாடின் ராமிரெஸ். மேலும் அவர் கூறுகையில், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் கலக்கின்றன. காலநிலை மாற்றம் உண்மையில் அந்த வேகத்தை மாற்றுகிறது.
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் சில இடங்களில் மற்றவற்றை விட வேகமாக கலக்கிறது. இரண்டு பெருங்கடல்களும் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் சந்திக்கின்றன. பீகிள் நீரிணையில், உருகும் பனிப்பாறைகளிலிருந்து வரும் நன்னீர் மற்றும் உப்புநீரும் கலக்கிறது. இதுவே யூடியூப் வீடியோக்களில் இரு பெருங்கடலும் கலக்கும் இடத்தில் கோடுகளைப் போல தோற்றமளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து BBC Science Focus என்ற அறிவியல் மாத இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் கலக்கின்றன. அவை தனித்தனியே இல்லை. நமது கிரகத்தின் பெருங்கடல்களுக்கு நாம் தனித்தனி பெயர்களைக் கொடுத்திருந்தாலும், உண்மையில் அவற்றுக்கிடையே எந்த எல்லையும் இல்லை. மேலும், நீரோட்டங்கள் அவற்றுக்கிடையே தொடர்ந்து பாய்ந்து அவற்றின் நீரைக் கலக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், slormp1 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வைரலாகும் காணொலியில் உள்ள காணொலிகள் இரண்டும் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. ஒன்று சீனாவில் உள்ள மஞ்சள் நதி பொஹாய் கடலைச் சந்திக்கும் தருணத்தையும் மற்றொரு காணொலி கனடாவில் உள்ள ஃப்ரேசர் நதி ஜார்ஜியா ஜலசந்தியில் பாய்வதையும் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்குவதில்லை என்ற தகவல் தவறானது என்றும் உண்மையில் அவை ஒன்றோடு ஒன்று கலக்குகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், வைரலாகும் காணொலியில் இருப்பது நதியும் கடலும் சந்திக்கும் இடம் என்பதும் தெரியவந்தது.