Fact Check: பாகிஸ்தான் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? உண்மை அறிக
இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் என்று சமூகவலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில் சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, “இது சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கிய போர் விமானம் காஷ்மீரின் பாம்போர் பகுதியில் இந்திய இராணுவ ராடார் மூலம் தாக்கி அழிக்கப்பட்டது.” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் ஹெலிகாப்டர் உதவியுடன் அப்புறப்படுத்தப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
நியூஸ் மேட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
முதலில் வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இன்று (மே 12) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
BBC Tamil வெளியிட்டுள்ள செய்தி
மேலும், தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது” என்று BBC Tamil ஊடகம் இன்று (மே 12) செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிடவில்லை. அதேசமயம், பாகிஸ்தானும் தனது போர் விமானம் சேதமடைந்தது என்று தெரிவித்துள்ளதே தவிர வீழ்த்தப்பட்டதாக கூறவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை குறித்து கண்டறிய அதனை ஆய்வு செய்தபோது, அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. இதனால், Deepfake Analysis Unit என்ற AI தரவுகளை ஆய்வு செய்யக்கூடிய தளத்திற்கு காணொலியை அனுப்பி ஆய்வு செய்தோம்.
காணொலியில் காணப்படும் சிதைவுகள்
அவர்கள் அளித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் காணொலி AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய ஹெலிகாப்டர் மற்றும் சேதமடைந்த போர் விமானத்தின் பகுதிகளை Was It AI என்ற தளத்தில் பதிவேற்றி ஆய்வு மேற்கொண்டதில் அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்ற முடிவைத் தந்தன.
Was It AI ஆய்வு முடிவுகள்
தொடர்ந்து, காணொலியை வெறும் கண்ணால் ஆய்வு செய்ததில் ஹெலிகாப்டரின் கட்டமைப்பு மிகவும் விசித்திரமாகத் தெரிவது தெரியவந்தது. அதன் வால் பகுதியில் உள்ள இறக்கைகளின் வடிவம் ஒவ்வொரு ஃபிரேமிலும் மாறுவது போல் தெரிகிறது. ஹெலிகாப்டரின் மேல் பகுதியில் உள்ள முக்கிய இறக்கைகளிலும் அதே பிரச்சினை காணப்படுகிறது. அவை களிமண்ணால் உருவாக்கப்பட்டது போல வடிவத்தை மாற்றுகின்றன.
தரையில் 3 பணியாளர்கள் உள்ளனர். அதில், சிதைந்து கிடக்கும் விமானத்தின் மூக்கின் பின்னால் இருக்கக்கூடியவரைப் பார்க்கும்போது, காணொலியின் முதல் வினாடிகளில் அவரது நிழல் மெல்லிய காற்றிலிருந்து தோன்றுவது போல் தெரிகிறது.
மேலும், காணொலியின் ஏதாவது ஒரு பகுதி ஒவ்வொரு நொடியும் வடிவம் மாறுவது போல் தோன்றும் அசையும் தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒரு உண்மையான ஹெலிகாப்டர் அல்லது மனித உடலில் இதுபோன்ற நடுக்கங்கள் தோன்றாது” என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வேகம் குறைக்கப்பட்ட காணொலி
தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் வேகத்தை குறைத்து அதனை ஆய்வு செய்ததில் AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் காணொலியில் இருக்கக்கூடிய சிதைவுகள் அதில் இருப்பது தெளிவாக தெரிவதை நம்மால் காண முடிந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானம் என்று வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.