ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அந்நாடு மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், “கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம். பாக்கிஸ்தான் கொடியை எரித்து போராட்டம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து அந்நாட்டிற்கு எதிரான முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு கேரளாவில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது தெரியவந்தது.
வைரலாகும் காணொலி உண்மைதானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்டு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, நேற்று (ஏப்ரல் 23) ANI ஊடகம், “ஜம்முவில் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி, பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கத்தை எழுப்பி, கொடியை எரித்தனர்” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளது.
இதே காணொலியை The Print ஊடகமும் அதே தேதியில் பதிவிட்டிருந்தது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், டோக்ரா முன்னணி தலைவர் அசோக் குப்தா கூறுகையில், “எனது இந்துக்கள் மிகவும் பலவீனமாகிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். இதை இனியும் நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. பாகிஸ்தான் உடைந்துவிட்டது, ஆனாலும் அவர்களால் நம்மைத் தாக்க முடிகிறது.
பாகிஸ்தானை நசுக்கி பலுசிஸ்தானுடன் கைகோர்க்கும் நேரம் வந்துவிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். இந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை உலகமே உற்று நோக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
தொடர்ந்து கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இன்று (ஏப்ரல் 24) The Tribune செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஜம்முவில் புதன்கிழமை (ஏப்ரல் 23) பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணி உறுப்பினர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்து, குற்றவாளிகள் மற்றும் அவர்களை வழிநடத்தியவர்கள் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Tribune வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
முடிவாக, நம் தேடலில் கேரளாவில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டதாக வைரலாகும் காணொலி உண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் டோக்ரா முன்னணியினர் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.