பாகிஸ்தானில், செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோதே திடீரென கடலில் குதித்த செய்தியாளர், கடலின் ஆழத்தை பற்றியும் 'பிபர்ஜோய் புயல்' நிலவரத்தை பற்றியும் செய்தி வழங்கினார் என்று பாலிமர் டிவி, புதியதலைமுறை, ஜி நியூஸ் என பல்வேறு செய்தி நிறுவனங்கள் காணொலியுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் கடந்த 14ஆம் தேதி முழு நீள காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை ஆய்வு செய்ததில் காணொலியில் உள்ள நபர் இறுதியாக பேசி முடிக்கும் போது, "செய்தியாளர் அப்துல் ரஹ்மான் கான் மற்றும் ஒளிப்பதிவாளர் தைமூர் கானுடன் அப்துல் ரஹ்மான் நியூஸ், கராச்சி" என்று முடிக்கிறார். இதனைக் கொண்டு கூகுளில் தேடுகையில் கராச்சியில் அப்துல் ரகுமான் நியூஸ் என்ற ஊடகமே இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது கடந்த 16ஆம் தேதி இந்தியா டைம்ஸ், "கடலின் ஆழத்தை அளக்க தண்ணீரில் குதித்த பாகிஸ்தான் ‘நிருபர்’ என்ற அரங்கேற்றப்பட்ட காணொலி" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "அவர் உண்மையான செய்தியாளர் இல்லை என்றும், கராச்சியில் அப்துல் ரஹ்மான் நியூஸ் என்ற ஊடகம் இல்லை என்றும் அடிப்படையில், இது ஒரு அரங்கேற்றப்பட்ட காணொலி, பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டு பின்னர் வைரலானது"
மேலும், "அவரது வழக்கத்திற்கு மாறாக செய்தி வழங்கும் பாணி வேகமாக வைரலானது, புகழ்பெற்ற செய்தியாளர் 'சந்த் நவாபுடன்' (2008ஆம் ஆண்டு கராச்சி ரயில் நிலையத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் போது கேமரா முன்பு பயணிகள் குறுக்கிட்டதால் எரிச்சல் அடைந்ததார். இக்காணொலி வெளியாகி அதன் மூலம் வைரலானவர் சந்த் நவாப்) ஒப்பிடப்பட்டது". அதேபோன்று, "வைரலாகும் காணொலியில் இருக்கும் அப்துல் ரஹ்மான் கான் பத்திரிகையாளர் அல்ல, இந்த காணொலி நையாண்டிக்காக எடுக்கப்பட்டது. Pakistan Federal Union Of Journalist இதனை உறுதிப்படுத்தியுள்ளது" என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் லுப்னா ஜெரார் டுவிட்டரில் கடந்த 16ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் லுப்னா ஜெராரின் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமது தேடலின் வாயிலாக, வைரலாகும் காணொலியில் இருப்பது உண்மையான நிருபர் இல்லை என்றும், அவர் நையாண்டிக்காக எடுத்து வெளியிட்ட காணொலியைக் கொண்டு பல்வேறு ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.