பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் தொடர்ச்சியாக இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், “பாகிஸ்தானிலிருந்து வரும் வீடியோ. பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவுடனான போரில் ஈடுபட மறுத்ததால் அழுதபடி கேமராவில் பதிவாகியுள்ளார், ஆனால் ஜெனரல் ஆசிப் முனீர் பாகிஸ்தான் வீரர்களை கட்டாயப்படுத்தினார்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் தலையைக் குனிந்து அழுவது போன்று காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இக்காணொலி பழையது என்பது தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Mian Mohammad Nawaz Sharif என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வைரலாகும் அதே காணொலியை கடந்த மார்ச் 8ஆம் தேதி பதிவிட்டிருந்தார். அதில், “முதல் முறையாக விமானத்தில் பயணித்த பாக்கிஸ்தான் ராணுவ வீரர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இக்காணொலி 2024ஆம் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளதாக சிலர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டிருந்தனர். அதனைக் கொண்டு ஃபேஸ்புக்கில் தேடியபோது, Pakistan Army என்ற ஃபேஸ்புக் பக்கம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியின் மற்றோரு கோணக் கட்சியை பதிவிட்டுள்ளது. அதிலும், முதல்முறையாக விமானத்தில் பயணிக்கும் பாகிஸ்தான் ராணுவ வீரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதபோன்று அந்த ராணுவ வீரர் உண்மையில் சிரித்துக் கொண்டிருந்தார் என்று கூறி, அதன் முழுநீள காணொலியை சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், நியூஸ்மீட்டர் காணொலியின் சூழலைப் பற்றி ஆராயவில்லை. இக்காணொலி பழையது என்றும் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்பில்லாதது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்தியாவுடனான போரில் ஈடுபட மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் அழுததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பழையது என்றும் உண்மையில் அவர் அழுகவில்லை என்றும் தெரியவந்தது.