Fact Check: பணம் எடுக்க வங்கியின் முன்பு குவிந்தனரா பாகிஸ்தானியர்கள்? உண்மை என்ன

பாகிஸ்தான் மக்கள் பீதியில் பணத்தை எடுப்பதற்காக வங்கியின் முன்பு குவிந்ததாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 6 May 2025 5:58 PM IST

Fact Check: பணம் எடுக்க வங்கியின் முன்பு குவிந்தனரா பாகிஸ்தானியர்கள்? உண்மை என்ன
Claim:பீதியின் காரணமாக வங்கியில் பணம் எடுக்க குவிந்த பாகிஸ்தான் மக்கள்
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் இக்காணொலி 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், “பீதியில் பாகிஸ்தான் மக்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்தனர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் வங்கியின் முன்பு நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் உள்ள நிகழ்வு ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரயில்வே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி Ariana News என்ற ஆப்கான் ஊடகம் வைரலாகும் அதே காணொலியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. அதில், “காபூலில் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை சரிபார்க்க வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே Ariana News தனது இணையதளத்தில் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிகளை மீண்டும் திறக்க தாலிபான்கள் உத்தரவிட்டனர். மேலும், வாரத்திற்கு 20,000 ஆப்கானி வரை பணம் எடுத்துக்கொள்ளும் வரம்பை விதித்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள வங்கிகளுக்கு வெளியே பணம் எடுப்பதற்காக ஆப்கானியர்கள் வரிசையில் காத்திருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவலுடன் வைரலாகும் அதே காணொலியை TRT World, Daily Mail உள்ளிட்ட ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும், வைரலாகும் காணொலிக்கு இடையே பேங்க் ஆப் பாகிஸ்தானின் (Bank of Pakistan) முகப்பு பகுதியை எடிட் செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பாகிஸ்தான் மக்கள் பீதியில் பணத்தை எடுக்க வங்கியின் முன்பு குவிந்ததாக வைரலாகும் காணொலி உண்மையில் ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:வங்கியின் முன்பு பணம் எடுக்க குவிந்த பாகிஸ்தானியர்கள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் இக்காணொலி 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது
Next Story