“பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்கள் மீது கல்லெறிந்தது. இப்போது, பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது கல்லெறிந்து துரத்துகிறது இது தான் கர்மா” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், பொதுமக்கள் சிலர் சீருடை அணிந்த பாதுகாப்பு படையினர் மீது கல்லறியும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி PTM Voice For Pashtun என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி வெளியிட்டிருந்தது. அதில், “பலுசிஸ்தானின் ஹப் சௌக்கி பகுதியில் காவல்துறையினர் மீது கல்லெறிந்து விரட்டும் பொதுமக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவருகிறது.
மேலும், அதே தேதியில் “பலுசிஸ்தானின் ஹப் சௌக்கைச் சேர்ந்த பலூச் Vs காவல்துறை” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலியை Abu Suffyan என்ற ஃபேஸ்புக் பயனரும் பதிவிட்டுள்ளார். கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ANI கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, பலுசிஸ்தானின் ஹப் சௌக்கில் நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் இளம் பத்திரிகையாளரும் மாணவருமான ஜுபைர் பலூச் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கடத்தப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜுபைர் பலூச்சின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் விடுவிக்கக் கோரி CPEC நெடுஞ்சாலையை மறிப்பது உட்பட போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக தி பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
The Balochistan Post வெளியிட்டுள்ள செய்தி
மேலும், The Balochistan Post அதே தேதியில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ஜுபைர் பலூச் மீட்கப்பட்டதாகவும் ஹப் சௌக்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் லத்திசார்ஜில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கல்லெறிந்து துரத்துகின்றனர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு பலுசிஸ்தானின் ஹப் சௌக் பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட வன்முறை என்று தெரியவந்தது.