"பலஸ்தீன முஜாஹிதீன்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றி தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற சத்தம் எங்கும் எதிரொலித்தது" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆயுதம் ஏந்திய படையினர் "அல்லாஹு அக்பர்" என்ற முழக்கத்தோடு ஒரு நகருக்குள் வலம் வருவது போன்ற காட்சியும் கொடியை இறக்குவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் காணொலியை முழுமையாக ஆய்வு செய்ததில் காணொலியில் கீழே இறக்கப்படும் கொடி இஸ்ரேல் நாட்டின் கொடி இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி Orient என்ற சிரிய ஊடகம், "சிரிய புரட்சி, இட்லிப் விடுதலை வரலாற்றில் இருந்து மறக்க முடியாத தருணங்கள்" என்ற தலைப்புடன் வைரலாகும் காணொலியை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "சிரிய கிளர்ச்சியாளர்கள் கூட்டுத் தாக்குதலில் இட்லிப் நகரைக் கைப்பற்றினர்" என்ற தலைப்புடன் Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும், வைரலாகும் காணொலியின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இவற்றின் மூலம் இது சிரியாவில் நடைபெற்ற சம்பவம் என்று உறுதியாக கூற முடிகிறது. மேலும், இதே காணொலி ஏற்கனவே ஆப்கானிஸ்தானுடன் தொடர்புபடுத்தி தவறாக பகிரப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
Al Jazeeraவில் இடம்பெற்றுள்ள வைரலாகும் காணொலி
Conclusion:
நம் தேடலின் முடிவாக இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றிய பாலஸ்தீன போராளிக் குழுக்கள் என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் சிரியாவில் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது