கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் தற்போது வரை(பிப்ரவரி 8) 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், "துருக்கி நிலநடுக்கம் உலகை உலுக்கிய புகைப்படங்கள்" என்ற தலைப்பில் தந்தி டிவி நான்கு புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பினை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தற்போது, இத்தொகுப்பு வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படங்கள்
Fact-check:
இப்புகைப்படங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக முதலில், இடிபாடுகளில் சிக்கி உள்ள ஒருவரின் கை அருகே நாய் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அலமி(Alamy) எனும் புகைப்படங்கள் விற்பனை செய்யக்கூடிய இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் இருந்நது. மேலும், அது 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இடிபாடுகளின் முன்பாக முதியவர் ஒருவர் கண்ணீருடன், கையில் ரொட்டி துண்டுடன் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்கையில், ரிசர்ச்கேட்(Research Gate) நிலநடுக்கங்கள் தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டுள்ள ஆய்வில் இப்புகைப்படம் இருந்தது. மேலும் தேடும்போது, கியூரியஸ்டர்க்(Curious Turk) என்ற இணையதளம், 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இம்முதியவரின் புகைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, பெண் அழும் புகைப்படத்தை ஆய்வு செய்கையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக பிபிசி உருது இப்புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
இறுதியாக, இடிபாடுகளின் நடுவில் அமர்ந்துள்ள சிறுவனின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அப்போது, ஷட்டர்ஸ்டாக்(Shutter Stock) இணையதளத்தில் உக்ரைன் புகைப்படக்கலைஞர் இப்புகைப்படத்தை பதிவிட்டிருத்தார். மேலும், இது தொடர்பாக அப்புகைப்படக்கலைஞர் கடந்த பிப்ரவரி 7-ம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "துருக்கி நிலநடுக்கத்திற்குப் பிறகு இப்புகைப்படம் பரவலாக பகிரப்படுகிறது. ஆனால், அது உக்ரைனில் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஷட்டர்ஸ்டெஸ்டாக் மற்றும் அடோப் ஸ்டாக்(Adobe Stock) போன்ற தளங்களுக்கு பதிவேற்றப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Conclusion:
முடிவாக, துருக்கி நிலநடுக்கம் தொடர்பாக தந்தி டிவி வெளியிட்ட புகைப்படத் தொகுப்பில் பெண் அழும் புகைப்படம் மட்டுமே தற்போதைய துருக்கி நிலநடுக்கத்துடன் தொடர்புடையது என்பது உறுதியாகிறது. ஏனைய மூன்று புகைப்படங்களும் புகைப்படம் விற்பனை செய்யக்கூடிய இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், அவை பழைய நிலநடுக்க சம்பவங்களில் தொடர்புடையவை என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.