இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், “பதவி ஏற்ற உடனேயே இந்தியாவை வல்லரசாக்க வல்லுநருடன் களத்தில் இறங்கிய நம்முடைய துணை குடி அரசுத் தலைவர்” என்ற கேப்ஷனுடன் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் சித்தர் ஒருவர் இருக்கும் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு சித்தரை சந்தித்ததாக கூறி நையாண்டியாக பரப்பி வருகின்றனர்.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் 2023ஆம் ஆண்டு சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிய வந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2024ஆம் ஆண்டு, “மகாதேவமலையில் உள்ள சிவ சித்தரை சந்தித்த ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்” என்ற தகவலுடன் வைரலாகும் புகைப்படத்தில் சித்தருடன் இருக்கும் அதே காணொலியை BABA TV என்ற யூடியூப் சேனல் ஷார்ட்ஸாக வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “சித்தரிடம் ஆசிபெற்ற ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்” என்று சாணக்யா யூடியூப் சேனல் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காணொலி வெளியிட்டுள்ளது. மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக வைரலாகும் புகைப்படத்தில் உள்ள சித்தரோடு ராதாகிருஷ்ணன் இருக்கும் அதே புகைப்படத்தின் மற்றொரு கோணக் காட்சியுடன் தினத்தந்தி ஊடகம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி
அதன்படி, “கே.வி. குப்பத்தை அடுத்த காங்குப்பம் மகாதேவமலை கோவிலுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். அவருக்கு மகானந்த சித்தர் வரவேற்பு அளித்து, கோவில் பிரகாரங்களை சுற்றி காண்பித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சித்தருடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் மற்றும் காணொலி 2023ஆம் ஆண்டு அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.